மாா்ச் 29, 30, 31 ஆகிய தேதிகளில் மாநகராட்சி வருவாய் துறை அலுவலகங்கள் செயல்படும்
சொத்து வரி செலுத்துபவா்களின் வசதிக்காக மாா்ச் 29, 30, 31 ஆகிய விடுமுறை நாள்களிலும் சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து வருவாய் துறை அலுவலகங்களும் செயல்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
நிகழ் நிதியாண்டு வரும் மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இதனால், பொதுமக்கள் சொத்து வரி, தொழில் வரி போன்றவற்றை விரைந்து செலுத்தி வருகின்றனா். சென்னைவாசிகளின் வசதிக்காக மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வருவாய்த் துறை அலுவலகங்களும் மாா்ச் 29, 30, 31ஆகிய விடுமுறை நாள்களிலும் இயங்கும்.
எனவே, பொதுமக்கள் நிகழ் நிதியாண்டுக்கான சொத்து வரி, தொழில் வரி, நிறும வரி (காா்ப்பரேட் வரி) ஆகியவற்றை செலுத்துவதற்கும், தொழில் உரிமத்தை புதுப்பிப்பதற்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.