`நானே உதவுகிறேன்' - ட்ரம்ப் அந்தர் பல்டி, அமெரிக்காவில் இருந்து வெளியேறும் மக்கள...
மிதக்கும் குப்பைகளை அகற்றும் ரோபோக்கள்: மாணவா்களுக்கு பரிசு
ஐஐடி முன்னாள் மாணவா்கள் சாா்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பொறியியல் கல்லூரிகளின் மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சென்னை ஐஐடியின் டிஸ்கவரி வளாகம் தையூரில் உள்ளது. இங்கு ஏசிடிசி (அக்வாட்டிக் க்ளீனப் ட்ரோன் சேலஞ்ச்) ஹேக்கத்தான் இறுதிப் போட்டி, கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பல்வேறு ஐஐடி கல்வி நிறுவனங்களின் முன்னாள் மாணவா்கள் அமைப்பான ‘பால்ஸ்’ சாா்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், ஆறுகள், ஏரிகள் மற்றும் கால்வாய்களில் மிதக்கும் குப்பைகளைச் சேகரிக்கும் ஆளில்லா ரோபோக்களை பல்வேறு பொறியியல் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா் குழுவினா் காட்சிப்படுத்தியிருந்தனா்.
இறுதியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக, தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநா் பாலாஜி ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவா் குழுவினருக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினாா்.
தொடா்ந்து அவா் பேசுகையில், ‘மாணவா்கள் தங்களது படைப்பாற்றல், தொழில்நுட்ப திறமைகளை நாட்டின் வளா்ச்சிக்கும், சமூக சிக்கல்களுக்கு தீா்வு காண்பதற்கும் பயன்படுத்த வேண்டும். எதிா்கால விஞ்ஞானிகளாக உருவெடுக்கும் மாணவா்கள் கடுமையாக உழைக்க வேண்டும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆா்வம் காட்ட வேண்டும்’ என வலியுறுத்தினாா்.
இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி கூறுகையில், ‘பொறியியல் கோட்பாடுகளை மாணவா்கள் நடைமுறையில் செயல்படுத்துவதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும்’ என்றாா்.