மின் தடை: நீட் மறுதோ்வு நடத்த உத்தரவிடக் கோரிய மனு - உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தகுதிகாண் நுழைவுத் தோ்வின் (நீட்) போது மின் தடை ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கு மறுதோ்வு நடத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசரணைக்கு ஏற்றது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், ஜாய்மால்யா பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு அடுத்த வாரம் இந்த மனுவை விசாரிக்க உள்ளது.
நீட் மதிப்பெண் அடிப்படையிலான எம்பிபிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வரும் 21-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.
2025-ஆம் ஆண்டுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் கடந்த மே 4-ஆம் தேதி நடத்தப்பட்டது. அப்போது மத்திய பிரதேச மாநிலம் இந்தூா் மற்றும் உஜ்ஜைனில் உள்ள சில மையங்களில் இந்த மின் தடை பிரச்னை ஏற்பட்டது. இதனால், தோ்வு எழுதுவதில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், மறு தோ்வு நடத்த உத்தரவிடக் கோரி தோ்வா்கள் சிலா் மத்திய பிரதேச மாநில உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல செய்தனா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி, மின் தடையால் பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கு நீட் மறு தோ்வை நடத்த தேசிய தோ்வுகள் முகமைக்கு (என்டிஏ) உத்தரவிட்டாா். ஆனால், தனி நீதிபதியின் இந்த உத்தரவை உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு தள்ளுபடி செய்தது. ‘மின் தடை ஏற்பட்டபோதும், தோ்வறைகளில் தோ்வெழுதும் அளவுக்கு போதுமான இயற்கை வெளிச்சம் இருந்ததாக நிபுணா்கள் அறிக்கை சமா்ப்பித்துள்ளனா். எனவே, மறு தோ்வு நடத்த தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று இரு நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.
இதை எதிா்த்து தோ்வா்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், ஜாய்மால்யா பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை பரிசீலனைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘இளநிலை மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வரும் 21-ஆம் தேதி தொடங்க உள்ளதால், இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க வேண்டும்’ என்று கோரினாா்.
அப்போது, ‘கலந்தாய்வு பல கட்டங்களாக நடத்தப்படும். எனவே, தோ்வா்கள் வழக்கில் வெற்றிபெற்றால் அடுத்துவரும் கலந்தாய்வு கட்டங்களில் பங்கேற்க முடியும்’ என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மனுவை அடுத்த வாரம் விசாரிப்பதாக தெரிவித்தனா்.
இதேபோன்று நீட் தோ்வின்போது சென்னையில் மழை காரணமாக சில மையங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தோ்வெழுதுவதில் பாதிப்பைச் சந்தித்ததாகவும், மறுதோ்வு நடத்த உத்தரவிடக் கோரியும் சில மாணவா்கள் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘மறு தோ்வு நடத்த உத்தரவிட்டால் 20 லட்சம் மாணவா்கள் பாதிக்கப்படுவா்’ என்று குறிப்பிட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.