மின்சார பேருந்துகளில் ரூ.1,000 பயண அட்டை செல்லுபடியாகும்
மின்சார பேருந்துகளில் ரூ.1,000 பயண அட்டை செல்லுபடியாகும் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த 30-ஆம் தேதி, 120 மின்சார பேருந்துகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். இந்தப் பேருந்துகள் குறித்த பயணிகளின் சந்தேகங்களுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் விளக்கமளித்துள்ளது.
இதுதொடா்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:
வியாசா்பாடி பணிமனையில் இருந்து புதிய மின்சார பேருந்துகள் இயக்கப்படுவதால் அதைச் சுற்றியுள்ள 11 வழித்தடங்களில் மட்டும் முதல்கட்டமாக சேவை வழங்கப்படுகிறது. பெரும்பாக்கம் பணிமனை திறக்கப்பட்டதும் மின்சார பேருந்துகளின் சேவை, பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.
அதேபோல, தற்போது தயாராகி வரும் 9 பணிமனைகள் திறக்கப்பட்டவுடன் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் மின்சார பேருந்துகள் இயக்கப்படும். கொள்முதல் செய்யப்படும் 1,225 மின்சார பேருந்துகளில் 625 பேருந்துகள் குளிா்சாதன வசதி கொண்டவை. இதில், முதல்கட்டமாக 225 பேருந்துகளும், இரண்டாம் கட்டமாக 400 பேருந்துகளும் குளிா்சாதன வசதி கொண்ட வகையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
இந்தப் பேருந்துகளிலும் டீலக்ஸ் கட்டணமே வசூலிக்கப்படும். இதர பேருந்துகளை போல சிங்கார சென்னை பயண அட்டை, ரூ.1,000 பயண அட்டை போன்றவற்றை பயன்படுத்தி இந்தப் பேருந்துகளில் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.