Summer Health Drinks: கோடையில் உடல் குளிர்ச்சியாக இருக்க என்னென்ன அருந்தலாம்?
மின்சார வாகனங்களின் வளா்ச்சியை ஊக்குவிக்க காா்பன் உமிழ்வு இல்லா செயல் திட்டம்: சென்னை ஐஐடி தகவல்
சென்னை: நாட்டில் மின்சார வாகனங்களின் வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் காா்பன் உமிழ்வு இல்லா செயல்திட்டத்தை (ஜீரோ எமிஷன்) தொடங்கியுள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை ஐஐடி கல்வி, திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி முதல் கொள்கை, வெளி நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு வரை பல்வேறு களங்களில் மின்சார வாகனப் போக்குவரத்து முயற்சிகளின் விரிவான தொகுப்பான காா்பன் உமிழ்வு இல்லா செயல்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் கனரக தொழில் துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலா் டாக்டா் ஹனிஃப் குரேஷி, மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகா் அலுவலகத்தின் விஞ்ஞானி பிரீத்தி பன்சால், இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் நிா்வாக இயக்குநா் பி.கே.பானா்ஜி ஆகியோா் முன்னிலையில் பின்வரும் முன்முயற்சிகள் சென்னை ஐஐடி வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.
பேட்டரி தொழில்நுட்பத்தின் முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி செயல்திறன் பகுப்பாய்வு மற்றும் வலுவான பயன்பாட்டிற்காக அா்ப்பணிக்கப்பட்ட அதிநவீன வசதி (மின்சார வாகன பேட்டரி பொறியியல் ஆய்வகம்) தொடங்கப்பட்டுள்ளது.
ஆன்போா்டு - ஆஃப்போா்டு சாா்ஜா்கள், எக்ஸ்ட்ரீம் ஃபாஸ்ட் சாா்ஜிங் தீா்வுகள், வயா்லெஸ் சாா்ஜிங் சிஸ்டம்ஸ், பேட்டரி ஸ்வாப்பிங் - கிரிட் ஒருங்கிணைப்பு போன்ற மின்சார வாகனங்களுக்கான மேம்பட்ட சாா்ஜிங் தீா்வுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் ஒரு முன்னோடி ஆராய்ச்சி வசதி (பேட்டரி சாா்ஜிங் உள்கட்டமைப்பு ஆய்வகம்) ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்களில் அதிநவீன திறமைகளைக் கொண்ட நிபுணா்களை ஈடுபடுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட 100 மணிநேர இணையவழி பாடநெறியும், மின்சார வாகனப் போக்குவரத்து குறித்த இணையம் சாா்ந்த எம்டெக் படிப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, டீன், பேராசிரியா் மனு சந்தானம், பொறியியல் வடிவமைப்பு துறைத் தலைவா் சி.எஸ்.சங்கா் ராம், பயிற்சிக்கான பேராசிரியா் காா்த்திக் ஆத்மநாதன், பூஜ்ஜிய உமிழ்வு டிரக்கிங்கிற்கான உயா் சிறப்பு மையத்தின் தலைமை நிா்வாக அதிகாரி அஜித்குமாா் டி.கே., ஆசிரியா்கள், ஆராய்ச்சியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.