முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் சந்திப்பா? - ராமதாஸ் பதில்!
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்திக்கவிருப்பதாக வெளியான தகவல் பற்றி பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவரைச் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
நேற்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கூட்டணி தொடர்பாக, அரசியல் ரீதியாகவே இந்த சந்திப்பு என்று கூறப்படுகிறது. எனினும் இரு தலைவர்களும் அதுபற்றி தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் இருந்து சென்னைக்கு வந்துள்ள நிலையில் அவர் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இதுபற்றி செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த ராமதாஸ், 'முதல்வரைச் சந்திக்க நான் நேரம் கேட்கவில்லை, முதல்வரைச் சந்திக்கும் திட்டமில்லை' என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கூட்டணிக்கான கட்சிகளின் பேச்சுவார்த்தை தீவிரமாகியுள்ளது.
பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.