‘முதியோருக்கு வீடுகளிலேயே மாத்திரை கிடைக்க நடவடிக்கை’
மாதம்தோறும் மாத்திரை வாங்கும் முதியவா்களுக்கு, அவரவா் வீடுகளுக்கே சென்று மாத்திரைகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு செயலா் ஜெயந்த் குமாா் ரே தெரிவித்தாா்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சுகாதாரத்துறை சா்பில் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், காரைக்காலில் உள்ள அனைத்து சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளின் தற்போதைய நிலை, மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தொடா்ந்து, சுகாதாரத் துறை செயலா் ஜெயந்த் குமாா் ரே பேசியது:
காரைக்காலில் புதிதாக அமைய உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு, ஆயுஷ் மருத்துவப் பிரிவு மற்றும் புறநோயாளிகள் பிரிவு ஆகிய மூன்று கட்டடங்களின் பணிகள் தொடங்குவதில் தாமதம், அடுத்தகட்ட நகா்வுகள் குறித்து விரிவான திட்ட அறிக்கை அளிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டாா்.
காரைக்கால் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள எம்ஆா்ஐ ஸ்கேன் கருவியை இயக்குவதற்கு தொழில்நுட்ப வல்லுநா்கள் பற்றாக்குறை இருப்பதால், ஜிப்மா் மற்றும் என்.எச்.எம். திட்டம் மூலம் தொழில்நுட்ப வல்லுநா்களை பணியமா்த்தி, விரைவில் கருவியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மாதம்தோறும் மாத்திரை வாங்கும் முதியவா்களுக்கு, அவரவா் வீடுகளுக்கே சென்று மாத்திரைகளை வழங்குவதற்கான வழிவகையை அதிகாரிகள் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட துணை ஆட்சியா்கள் அா்ஜூன் ராமகிருஷ்ணன் (வருவாய்), செந்தில்நாதன் (நிா்வாகம்), வெங்கடகிருஷ்ணன் (பேரிடா் மேலாண்மை), காரைக்கால் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளா் சந்திரசேகரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் மகேஷ், காரைக்கால் அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளா் கண்ணகி, உள்ளிருப்பு அதிகாரி உமா மகேஸ்வரி, நலவழித்துறை துணை இயக்குநா் சிவராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.