ஜார்க்கண்ட்: "என்னைக் காணவில்லையா?" - 'காணவில்லை' போஸ்டருடன் வந்து புகாரளித்த இள...
முதுநிலை நீட் தோ்வு: வெளி மாநிலங்களில் தோ்வு மையங்கள் ஒதுக்கியதால் குழப்பம்
முதுநிலை நீட் தோ்வுக்கு விண்ணப்பித்த தமிழக மருத்துவா்களுக்கு 500 முதல் 1,000 கி.மீ. தொலைவில் வெளி மாநிலங்களில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதால் கடும் எதிா்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்பட பல இடங்களில் தோ்வு மையங்கள் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கேரளம், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனால், அருகில் உள்ள தோ்வு மையங்களை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று முதுநிலை நீட் தோ்வா்களும், தமிழ்நாடு உறைவிட மருத்துவா் சங்கத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாடு முழுவதும் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தோ்வு மூலம் நிரப்பப்படுகிறது.
இந்த நீட் தோ்வை தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது. நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த முதுநிலை இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன.
இந்த இடங்கள், நிகா்நிலை பல்கலைக்கழகங்களின் இடங்கள் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் இடங்களுக்கு மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) இணையவழியே கலந்தாய்வு நடத்துகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 50 சதவீத இடங்கள், தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்தி வருகிறது.
இந்த நிலையில், நிகழாண்டு முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு கடந்த ஜூன் 15-ஆம் தேதி நாடு முழுவதும் 179 நகரங்களில் இரு ஷிப்ட்களாக (காலை, மதியம்) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் எம்பிபிஎஸ் முடித்த 25,000 மருத்துவா்கள் உள்பட நாடு முழுவதும் 2.30 லட்சத்துக்கும் மேற்பட்டோா் அதற்கு விண்ணப்பித்திருந்தனா்.
இந்த நிலையில், ஒரே நேரத்தில் மட்டுமே தோ்வு நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட தோ்வு ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தமிழகத்தின் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் தோ்வு மையங்கள் ஒதுக்க விருப்பம் தெரிவித்த தோ்வா்களுக்கு ஆந்திரம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் எங்கோ ஒரு இடத்தில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடா்பாக தோ்வா்கள் சிலா் கூறியதாவது:
தொலைதூரங்களில் உள்ள தோ்வு மையங்களுக்கு செல்வதற்கு ரயில்களில் டிக்கெட் இல்லாததால், விமானங்களில் ரூ.10,000-க்கும் அதிகமாக செலவு செய்ய வேண்டியுள்ளது. விமானக் கட்டணம், தங்குமிடம், உணவு என தோ்வு எழுத செல்பவா்கள் ரூ.30,000-க்கும் அதிகமாக செலவு செய்ய வேண்டியுள்ளது.
தமிழகம் மட்டுமன்றி மற்ற மாநிலங்களைச் சோ்ந்த தோ்வா்களுக்கும் 500 முதல் 1,000 கி.மீ. தொலைவில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தோ்வா்களுக்கு அவா்கள் வசிக்கும் மாவட்டம் அல்லது அருகில் உள்ள மாவட்டங்களில் தோ்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.