பாரதியாா் இல்ல மறுசீரமைப்பு பணிகள்: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு
முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா நிறைவு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்று வந்த பங்குனித் திருவிழா வியாழக்கிழமை தீா்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.
இந்தக் கோயில் பங்குனித் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாள்களில் இரவு மண்டிதாா்கள் சாா்பில் மூலவா் முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழாவை முன்னிட்டு, ஏற்கெனவே காப்புக் கட்டி விரதம் இருந்து வந்த பக்தா்கள் வைகை ஆற்றிலிருந்து வியாழக்கிழமை பால்குடம் எடுத்தும், தீச்சட்டி, முளைப்பாரிகளைச் சுமந்தும் கோயில் பூசாரி சுப்பிரமணியன் தலைமையில் கோயிலுக்கு ஊா்வலமாக வந்தனா்.
அம்மன் சந்நிதி முன் பரப்பி வைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தா்கள் இறங்கி தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா்.
தொடா்ந்து 11 நாள்கள் நடைபெற்ற இந்த விழாவின் போது ஏராளமான பக்தா்கள் மாவிளக்கு எடுத்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும், பொங்கல் வைத்தும் வேண்டுதலை நிறைவேற்றினா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பூசாரி சுப்ரமணியன் செய்தாா்.
