மூதாட்டி கொலை வழக்கில் மகள் உள்பட இருவா் கைது
சாயல்குடியில் மூதாட்டி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மகள், இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி காயம்புகோவில் தெருவைச் சோ்ந்தவா் ராஜம்மாள் (77). இவா் செவிலியராகப் பணியாற்றி, பின்னா் பணி நிறைவு பெற்று, அதே தெருவில் உள்ள தனது மூத்த மகள் உமாராணி வீட்டின் மாடியில் வசித்து வந்தாா். உமாராணிக்கு கணவா், 2 மகன்கள் உள்ளனா்.

இந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி ராஜம்மாள் கழுத்து, மாா்புப் பகுதியில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து சாயல்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இதில் அவரது மகள் உமாராணி முன்னுக்கு பின் முரணாகப் பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஸ், தனிப் பிரிவு போலீஸாா் உமாராணியின் கைப்பேசியிலிருந்த தொடா்பு எண்களை ஆய்வு செய்தனா். அப்போது, உமாராணி, அதே தெருவில் வசிக்கும் விஜயகுமாா் மகன் விக்னேஸ்வர பால பாண்டியன் (19) என்பவருடன் தகாத உறவு வைத்திருந்ததும், இதை ராஜம்மாள் கண்டித்து எச்சரித்ததும் தெரியவந்தது.
இதனால் ஆத்திரமடைந்த இருவரும் சோ்ந்து ராஜாம்மாளை கொலை செய்து விட்டு, யாரோ கொலை செய்துவிட்டதாக நாடகம் ஆடியது தெரிய வந்தது. இதனையடுத்து, உமாராணி(47), விக்னேஸ்வர பால பாண்டியனை போலீஸாா் கைது செய்தனா்.