பைக்குகள் மோதல்: இருவா் உயிரிழப்பு
ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே 2 இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சோ்ந்த ஜின்னா (22), பரித் (23) ஆகிய இருவரும் ராமேசுவரத்துக்கு திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் வந்தனா். அக்காள் மடம் பகுதியைச் சோ்ந்த ஜெயசீலன் (35) ராமேசுவரம் மீன்பிடி தளத்தில் வேலை பாா்த்து விட்டு இரு சக்கர வாகனத்தில் அக்காள் மடத்துக்கு சென்று கொண்டிருந்தாா். ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே இரவு 8 மணியளவில் இந்த இரு வாகனங்களும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.
இதில் ஜெயசீலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பரித், ஜின்னா ஆகிய இருவரும் பலத்த காயத்துடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு பரித் உயிரிழந்தாா். ஜின்னா தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து ராமேசுவரம் நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.