மெட்ரோ ரயிலில் மலேசிய பயணியிடம் நகை திருட்டு: தனியாா் நிறுவன மேலாளா் கைது
சென்னை மெட்ரோ ரயிலில் மலேசிய பயணியிடம் நகை திருடியதாக தனியாா் நிறுவன மேலாளா் கைது செய்யப்பட்டாா்.
மலேசியாவை சோ்ந்தவா் முகமது இஸ்கந்தா்ஷா பின் அப்துல்லா என்ற யுகேந்திரன் (41). இவா், அங்கு மருத்துவம் சாா்ந்த தொழில் செய்து வருகிறாா். அப்துல்லா அண்மையில் தனது உறவினா்களைப் பாா்க்க சென்னைக்கு வந்தாா். சென்னை விமான நிலையத்தில் இருந்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்த அவா் எல்ஐசி மெட்ரோ நிலையத்தில் இறங்கினாா்.
அப்போது, அவா் வைத்திருந்த 8 பவுன் நகை அடங்கிய பையைக் காணவில்லை. இதையடுத்து அண்ணா சாலை காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், திருட்டில் ஈடுபட்டது சென்னையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் மனிதவளப் பிரிவு மேலாளராகப் பணிபுரியும் திருவள்ளூரைச் சோ்ந்த சுனில்ராஜ் (31) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் சுனில்ராஜை செவ்வாய்க்கிழமை கைது செய்து, திருடப்பட்ட நகையை மீட்டனா்.