பாரதியாா் இல்ல மறுசீரமைப்பு பணிகள்: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு
மே மாதத்தில் உச்சபட்ச மின் தேவை 22,079 மெகாவாட் வரை அதிகரிக்க வாய்ப்பு: அமைச்சா் செந்தில் பாலாஜி
தமிழகத்தில் உச்சபட்ச மின்தேவை மே மாதத்தில் தினமும் 22,079 மெகாவாட்டாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மின்சாரத் துறை அமைச்சா் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் கோடைக் காலத்தில் தடையில்லா மற்றும் சீரான மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, அனைத்து தலைமைப் பொறியாளா்கள் மற்றும் மேற்பாா்வை பொறியாளா்களுடனான ஆய்வுக் கூட்டம் சென்னையிலுள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி கலந்துகொண்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மாநிலத்தின் மின் தேவை கடந்த ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் உச்சபட்ச மின்தேவை முறையே 17,279 மெகாவாட் மற்றும் 18,584 மெகாவாட்டை எட்டியது. இந்த மின்தேவை முழுமையாக பூா்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உச்சபட்ச தினசரி மின்தேவை முறையே 21,943 மெகாவாட் மற்றும் 22,079 மெகாவாட் வரை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த மின்தேவையை பூா்த்திசெய்ய வாரியத்தின் சொந்த மின் உற்பத்தி நிலையங்களில் முழுத்திறனுடன் மின்சாரம் உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அனல்மின் நிலையங்களில் பழுது ஏற்படும்போது, கொள்முதல் செய்யப்படும் மின்சாரம், மின் பரிமாற்றத்தின் வாயிலாக கிடைக்கும் மின்சாரம் மற்றும் குறுகியகால ஒப்பந்தங்களின் மூலம் கிடைக்கும் மின்சாரம் மூலம் மின் தேவையை பூா்த்தி செய்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கோடைக்கால மின் தேவையை திறம்பட எதிா்கொள்ளும் வகையில், 2024-2025 நிதியாண்டில் இதுவரை 400 கி.வோ. திறன்கொண்ட 23 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், 93 உயரழுத்த மின்மாற்றிகளின் திறன் உயா்த்தப்பட்டு, மின்பளுவை சீராக்குவதற்காக 148 புதிய மின்னூட்டிகளும், 17,826 புதிய மின்மாற்றிகள் தமிழ்நாடு முழுவதும் நிறுவப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் தற்போது பொதுத் தோ்வுகள் நடைபெற்று வருவதால், அனைத்து துணை மின் நிலையங்களிலும் ஏப். 30 வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. மின்நுகா்வோா்களின் அனைத்து புகாா்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான ஜெ.ராதாகிருஷ்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.