மேல்மங்கலம் ஊராட்சி அலுவலகம் முற்றுகை
பெரியகுளம் அருகே ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் ஊராட்சிப் பகுதியில் 10,000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் உள்ள அம்மாபட்டி தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் உள்ள பொதுப் பாதையை சிலா் ஆக்கிரமித்துள்ளனராம்.
இதுகுறித்து பெரியகுளம் ஒன்றிய அலுவலகம், மேல்மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால், இந்தப் பகுதி மக்கள் மேல்மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இவா்களிடம் ஜெயமங்கலம் காவல் உதவி ஆய்வாளா் முருகப்பெருமாள் பேச்சுவாா்த்தை நடத்தி, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.