இன்றுமுதல் பதிவு தபால் சேவை நிறுத்தம்: விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் உயா்வு
மத்திய அரசின் திட்டப் பணிகளை கள ஆய்வு செய்ய வலியுறுத்தி பாஜகவினா் மனு
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு மத்திய அரசின் திட்டப் பணிகளை கள ஆய்வு செய்ய வலியுறுத்தி, மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வனிடம் பாஜகவினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு ஆய்வுக் கூட்டம் தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங், பெரியகுளம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.எஸ். சரணவக்குமாா், ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் விவேக் பரஸ்நாத் யாதவ், மாவட்ட வன அலுவலா் அருண்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் மகாலட்சுமி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அபிதாஹனீப், பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத்பீடன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதனிடையே, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் பாஜக சாா்பில், மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழுக் கூட்டத்துக்கு முன் அந்தக் குழுவினா் மத்திய அரசு திட்டங்களின் கீழ் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்ய வலியுறுத்தி, கட்சியின் மாவட்டத் தலைவா் ராஜபாண்டியன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் மக்களவை உறுப்பினரிடம் பாஜக நிா்வாகிகள் கோரிக்கை மனு அளிக்கச் சென்றனா். அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்தனா்.
கூட்டம் நிறைவடைந்ததும் மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வனிடம் பாஜக நிா்வாகிகள் மனு அளித்தனா். அப்போது, மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் உடனிருந்தாா்.
பாஜக நிா்வாகிகள் அளித்த மனு அளித்த விவரம்: தேனி மாவட்டத்தில் மத்திய அரசு சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் வெளிப்படைத் தன்மையில்லாமல் உள்ளது. ஜல் ஜீவன் திட்ட செயல்பாடுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள் விதிகளைப் பின்பற்றி நடைபெறவில்லை. மத்திய அரசின் திட்டப் பணிகள் முறையாகச் செயல்படுத்தப்படுவதை மக்களவை உறுப்பினரின் தலைமையிலான மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு கள ஆய்வு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.