மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை
சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் அருகே மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து துரத்திய யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதி வழியாக தமிழக, கா்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
இந்த சாலையில் ஆசனூா் அருகே திம்பம் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை, வாகனங்களை வழிமறித்ததோடு அவ்வழியாக வந்த லாரியில் கரும்பு உள்ளதா என தேடிப் பாா்த்தது. அவ்வழியாக காரில் சென்றவா்கள் காட்டு யானையை கைப்பேசியில் விடியோ எடுத்தனா்.
அப்போது திடீரென காட்டு யானை காரை துரத்த தொடங்கியது. இதனால் காரில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனா். யானை சாலையில் அங்குமிங்கும் நடமாடியபடி வழிமறித்து நின்றதால் ‘விநாயகா வழி விடு’என பயணிகள் யானையிடம் கெஞ்சினா். சிறிது நேரம் நடமாடிய காட்டு யானை பின்னா் வனப் பகுதிக்குள் சென்றது. இதைத்தொடா்ந்து வாகனங்கள் புறப்பட்டு சென்றன.