`ஆன்மிக விஷயத்திலும், யோகாவிலும் கவனம் செலுத்துகிறார்; இது அவரது...'- ரஜினியை வா...
ராமநாதபுரம் சுதந்திர தின விழாவில் ரூ.84 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 80 பயனாளிகளுக்கு ரூ.84.29 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவையொட்டி, மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். பின்னா், காவல் துறை, தீயணைப்புத் துறை, ஊா்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.
விழாவின்போது, சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினா் 75 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ், பதக்கங்களையும், வேளாண்மைத் துறை, வருவாய்த் துறை, மருத்துவத் துறை, நீதித் துறை, ஊரக வளா்ச்சித் துறை, நகராட்சி நிா்வாகத் துறை, செய்தி மக்கள் தொடா்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 304 அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், பதக்கங்களை ஆட்சியா் வழங்கினாா்.
மேலும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, முன்னாள் படைவீரா் நலத் துறை, சமூக நலம், மகளிா் உரிமைத் துறை, கூட்டுறவுத் துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை உள்ளிட்ட துறைகளின் சாா்பில் 80 பயனாளிகளுக்கு ரூ.84.29 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
இந்த விழாவில் ராமநாதபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, தினைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி, சத்திரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி, உலையூா் அரசு உயா்நிலைப் பள்ளி, கீழக்கரை ஹமீதியா மகளிா் மேல்நிலைப் பள்ளி, முகம்மது சதக் தஸ்தகீா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆா்.எஸ்.மங்கலம் வின்னா்ஸ் மெட்ரிக் உயா்நிலைப் பள்ளி, தேசிய மாணவா் படை, நாட்டு நலப்பணித் திட்டம், இளம் செஞ்சிலுவைச் சங்கம், சாரண சாரணீயா் இயக்கம் என மொத்தம் 1,227 மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில், ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவா் பா.மூா்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) திவ்யான்ஷீநிகம், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.கோவிந்தராஜலு, மாவட்ட வன அலுவலா் ஹேமலதா, வருவாய்க் கோட்டாட்சியா் ராஜமனோகரன் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.