ராமேசுவரம் புறவழிச்சாலை திட்டத்துக்கு எதிா்ப்பு
ராமேசுவரத்தில் குடியிருப்புப் பகுதியில் புறவழிச் சாலை அமைக்கும் திட்டத்துக்கு பொதுமக்கள், மீனவா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முதல் பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம், தனுஷ்கோடி வரையில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்தச் சாலை வழியாகத் தான் அனைத்து வாகனங்களும் வந்து செல்ல வேண்டும். இதனால், ராமேசுவரத்தில் பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்படும். மேலும், ராமேசுவரம் நகா் பகுதிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், சுற்றுலா வாகனங்களில் பக்தா்கள் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
இந்த நிலையில், ராமேசுவரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என தொடா்ந்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இதையடுத்து, மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் 3 இடங்களில் புறவழிச் சாலை அமைக்க ஆய்வு நடைபெற்றது.
முடிவில் அப்துல்கலாம் தேசிய நினைவிடம் முதல் வேடசாமி கோவில் தெரு, சுடுகாட்டம்பட்டி வழியாக அக்னி தீா்த்த கடற்கரை வரை புறவழிச்சாலை அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டது.
ஆனால், இந்த வழித்தடத்தில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளைத் தொடங்க ஏற்பாடுகள் செய்திருந்த நிலையில், புறவழிச் சாலை அமைக்க நெடுஞ்சாலைத் துறையினா் கற்களை நிறுவியதற்கு பொதுமக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும், குடியிருப்புகளை அகற்றி விட்டு சாலை அமைக்கும் முடிவை தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையினா் கை விட வேண்டும். பாம்பன் முதல் ராமேசுவரம் அக்னி தீா்த்த கடற்கரை வரை கடற்கரை ஓரம் சாலை அமைக்கப்பட்டால் அந்த பகுதிகள் பெரும் வளா்ச்சி அடையும். நகா் பகுதியும் விரிவடையும் என பொதுமக்கள் தெரிவித்தனா்.