ராம்லீலா மைதானத்தில் தில்லி அமைச்சரவை பதவியேற்பு விழா?
பிப்.8-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழாவிற்கான இடம் குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. ராம்லீலா மைதானம் பரிசீலிக்கப்படும் சாத்தியமான இடங்களில் ஒன்று என்று ஞாயிற்றுக்கிழமை காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அங்குள்ள ஏற்பாடுகளை சரிபாா்க்க மூத்த காவல் துறை அதிகாரிகள் குழு அந்த இடத்திற்குச் சென்றுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா். ஜவாஹா்லால் நேரு மைதானம் மற்றும் யமுனை நதிக்கரையோரத்தில் உள்ள இடங்கள் ஆகியவையும் பரிசீலனையில் உள்ள பிற இடங்கள் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
பிப்.5 ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மொத்தமுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 48 இடங்களை வென்றது. இது ஆம் ஆத்மி கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது.