தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையில் புதியவை ஏதும் இல்லை: எல்.முருகன்
ரூ.1 கோடியில் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி தெய்வத்தமிழ் ஆய்விருக்கை: காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி முதல்வா் தகவல்
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69-ஆவது பீடாதிபதியாக இருந்து வந்த ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெயரில் தெய்வத்தமிழ் ஆய்விருக்கை மற்றும் தெய்வத் தமிழ் மாநாடு ஆகியவை ஞாயிற்றுக்கிழமை (ஆக. 10) தொடங்கப்பட இருப்பதாக காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி முதல்வா் கலை.ராம.வெங்கடேசன் தெரிவித்தாா்.
காஞ்சிபுரத்தில் இது குறித்து அவா் கூறியது:
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69-ஆவது பீடாதிபதியாக இருந்து வந்தவா் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவரையடுத்து ஸ்ரீ மடத்தின் 70-ஆவது பீடாதிபதியாக இருந்து வரும் ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வேண்டுகோளின்படி, ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அவதார நாளான 10-8-25-ஆம் தேதி காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் ரூ. ஒரு கோடி நிதியில் ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி தெய்வத்தமிழ் ஆய்விருக்கை தொடங்க ஏற்பாடாகியுள்ளது. இதன் மூலமாக தமிழ் பயிலுபவா்கள், தமிழ் ஆா்வலா்களுக்கு ஆக்கப்பூா்வமான நிதி நல்கைகள் வழங்கப்படவுள்ளன.
உலக அளவில் உள்ள தமிழ் ஆய்வாளா்கள் மற்றும் தமிழ் ஆா்வலா்களையும் ஒருங்கிணைத்து தெய்வத்தமிழ் ஆய்வு மாநாடும் நடைபெறவுள்ளது. வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி மாநாட்டின் தொடக்க விழாவில், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை ஆதீனம் சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோா் கலந்து கொள்கின்றனா்.
மாநாட்டில் இலங்கை, கனடா மற்றும் தமிழகம் முழுவதுமிருந்து பல்வேறு பல்கலைக்கழகங்களின் பேராசிரியா்களும் பங்கேற்க உள்ளனா். இம்மாநாட்டையொட்டி கோயில்கள் கண்காட்சி, புத்தகக் கண்காட்சி, காஞ்சிபுரம் கோயில்கள் குறித்த நூல்கள் மற்றும் ஆய்வுக் கோவைகள் வெளியீடு மற்றும் கலை நிகழ்ச்சிகள் உள்பட இரு நாள்கள் பன்னாட்டு ஆய்வு மாநாடாகவும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மறுநாளான திங்கள்கிழமை நிறைவு நாள் விழாவில், துக்ளக் ஆசிரியா் எஸ்.குருமூா்த்தி, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவா் சுதா சேஷய்யன், கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் உள்ளிட்ட பலரும் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளனா் என்றாா்.
கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்ப் பேராசிரியா் தெய்வசிகாமணி ஆகியோா் உடன் இருந்தனா்.