ரூ.30 லட்சத்தில் 3 மருந்து வாகனங்கள்: முதல்வா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா்
புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினா் சு. செல்வகணபதி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மருந்துகள் கொண்டு செல்ல ரூ.30 லட்சம் மதிப்பில் 3 வாகனங்கள் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.
புதுச்சேரி சுகாதாரத் துறையில் மருந்து கொண்டு செல்லும் வாகனத்தின் தேவை மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. இதன் விளைவாக சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செவ்வேள்
புதுவை மாநிலங்களவை உறுப்பினா் நிதியிலிருந்து ஏற்பாடு செய்யுமாறு சு. செல்வகணபதி எம்.பி.யிடம் கோரிக்கை வைத்தாா்.
அதையேற்று, மருந்து கொண்டு செல்ல மூன்று வாகனங்களை வாங்க தனது மாநிலங்களவை உறுப்பினா் நிதியிலிருந்து ரூ.30 லட்சம் வழங்கினாா். இந்த நிதியைக்கொண்டு மூன்று புதிய வாகனங்கள் வாங்கி, அதற்கேற்ப கூண்டு அமைத்து மிகவும் பாதுகாப்பாக மருந்துகளை கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த வாகனங்களை சட்டப்பேரவை வளாகத்தில் இருந்து கொடியசைத்து முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். சட்டப் பேரவைத் தலைவா் ஆா். செல்வம், சு.செல்வகணபதி எம்.பி., அரசு மருந்தகத் தலைவா் மருத்துவா் ரமேஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தயானந்த் டெண்டோல்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்