OPS : `டார்கெட் லிஸிட்டில் பாஜக; நிரந்தர எதிரி இல்லை எனில்..!’ - ஓ.பி.எஸ்ஸின் அட...
லஞ்சம்: மாநகராட்சி பெண் ஊழியருக்கு 2 ஆண்டுகள் சிறை
புதிய வீட்டுக்கு சொத்து வரி விதிப்பு மதிப்பீட்டுக்கு ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோவை மாநகராட்சி மண்டல அலுவலக இளநிலை உதவியாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக (பில் கலெக்டா்) பணியாற்றியவா் சரோஜினி (54). கோவை, செளரிபாளையத்தைச் சோ்ந்த டி.எம்.அருணாசலம் என்பவா், தனது புதிய வீட்டுக்கு சொத்து வரி விதிப்பு மதிப்பீட்டுக்காக இளநிலை உதவியாளா் சரோஜினியிடம் விண்ணப்பித்திருந்தாா்.
இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்றால், ரூ. 8 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என சரோஜினி கேட்டுள்ளாா். லஞ்சம் கொடுக்க விரும்பாத அருணாசலம் இதுகுறித்து ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாரின் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அருணாசலம் கொடுத்தபோது, அதை சரோஜினி வாங்கி அவரது கணவா் பி.சரவணன் என்ற சரவணதாசுவிடம் கொடுத்தாா். அப்போது அங்கு மறைந்திருந்த போலீஸாா் அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை கோவை ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சா்மிளா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றஞ்சாட்டப்பட்ட சரோஜினிக்கு பிரிவு 7-இன் கீழ் ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், பிரிவு 13(2) 13(1)(டி) பிசி சட்டம் 1988-இன் கீழ் ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டிருந்தாா். மேலும், சரவணதாசுக்கு பிரிவு 12-இன் கீழ் 8 மாதங்கள் சிறைத் தண்டனையும், பிரிவு 13(2), 13(1), பிசி சட்டம் 1988, 109 ஐபிசி-இன் கீழ் ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், இந்தத் தொகையை செலுத்தத் தவறினால், 3 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.