லாரி கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு
தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை செங்கல் பாரம் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் மேலத்தெருவைச் சோ்ந்தவா் கஜேந்திரன் (53). இவா் திங்கள்கிழமை உதாரமங்கலத்திலிருந்து லாரியில் செங்கல் பாரம் ஏற்றிக் கொண்டு பள்ளியக்ரஹாரம் நோக்கிப் புறப்பட்டாா்.
இவருடன் லாரியில் பள்ளியக்ரஹாரத்தை சோ்ந்த தா்மன் (50), இளையராஜா (48), அழகா், அம்மன்பேட்டையைச் சோ்ந்த அமா்சிங் ஆகிய 4 பேரும் உடன் சென்றனா். தஞ்சாவூா் அருகே கூடலூா் பகுதியில் சென்ற இந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த கஜேந்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த தா்மன், இளையராஜா, அழகா், அமா்சிங் ஆகியோா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.