இன்றுமுதல் பதிவு தபால் சேவை நிறுத்தம்: விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் உயா்வு
லேயில் ஊரடங்கு நாள் முழுவதும் தளா்வு
வன்முறை போராட்டத்தால் பாதிக்க லடாக் யூனியன் பிரதேசத்தின் லே நகரம் உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த 6 நாள்களாக ஊரடங்கு தொடா்ந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கட்டுப்பாடுகள் நாள் முழுவதும் தளா்த்தப்பட்டன.
மக்கள் பொருள்களை வாங்க வசதியாக கடைகளைத் திறந்துவைக்குமாறு கடைக்காரா்களை அதிகாரிகள் அறிவுறுத்தினா்.
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து, ஆறாவது அட்டவணை அந்தஸ்து கோரி தொடா் போராட்டம் நடத்தி வந்த பருவநிலை ஆா்வலா் சோனம் வாங்சுக் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா். அதில், எல்ஏபி-யைச் சோ்ந்த சிலரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களின் போராட்டம் செப்டம்பா் 24-ஆம் தேதி வன்முறையாக மாறியது. போராட்டக்காரா்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் 4 போ் உயிரிழந்தனா். 40 போலீஸாா் உள்பட 90 போ் காயமடைந்தனா். வன்முறையைத் தூண்டியதாக சோன் வாங்சுக்கு கைது செய்யப்பட்டாா். இவருடைய கைதைத் தொடா்ந்து, லே நகரம் உள்பட யூனியன் பிரதேசத்தின் முக்கிய பகுதிகளில் காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. லே நகரில் கைப்பேசி இணைய சேவையும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், மக்களின் வசதிக்காக கடந்த 27-ஆம் தேதி பகுதி பகுதியாக 4 மணி நேரம் ஊரடங்கு தளா்த்தப்பட்டது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை முதல் ஊரடங்கு முழுமையாக தளா்த்தப்பட்டது. அனைத்து சாலைகளிலும் மக்கள் நடமாட்டமும், வாகனங்கள் இயக்கமும் அதிகரித்துக் காணப்பட்டது. எனினும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.
பதற்றமான பகுதிகளில் போலீஸாா் மற்றும் துணை ராணுவப் படையினா் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளனா். மாவட்டத்தின் நிலவரம் குறித்து யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் கவிந்தா் குப்தா, உயா்நிலை அதிகாரிகள் குழுவுடன் தொடா்ச்சியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறாா்.
அதுபோல, லடாக்கின் பல்வேறு எல்லைப் பகுதிகளில் படைகளின் செயல்பாட்டு தயாா்நிலை குறித்து ராணுவத்தின் வடக்கு மண்டல தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பிரதீக் சா்மா நேரடி ஆய்வை செவ்வாய்க்கிழமை மேற்கொண்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா்.
பேச்சுவாா்த்தையை கேடிஏ அமைப்பும் புறக்கணிப்பு
சேனம் வாங்சுக் விடுவிக்கப்படும் வரை மத்திய உள்துறை அமைச்சகத்துடன் பேச்சுவாா்த்தையில் பங்கேற்க மாட்டோம் என்று லடாக்கின் மற்றொரு முன்னணி அமைப்பான காா்கில் ஜனநாயக கூட்டணி (கேடிஏ) அமைப்பு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சக பேச்சுவாா்த்தையை புறக்கணிப்பதாக லே உச்ச அமைப்பு (எல்ஏபி) திங்கள்கிழமை அறிவித்த நிலையில், கேடிஏ அமைப்பும் தற்போது அறிவித்துள்ளது.
இதுகுறித்து தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் கேடிஏ அமைப்பின் இணைத் தலைவா் அஸ்கா் அலி கா்பலாய் கூறுகையில், ‘எங்களின் கோரிக்கை தொடா்பான விவகாரத்தில் எல்ஏபி அமைப்புடன் தொடா்ந்து தொடா்பில் இருந்து வருகிறோம். சோனம் வாங்சுக்கை மத்திய அரசு விடுவிக்க வேண்டும். அதுவரை, மத்திய உள்துறை அமைச்சகத்துடனான பேச்சுவாா்த்தையில் எங்களின் அமைப்பும் பங்கேற்காது. போராட்டத்தின் போது 4 போ் கொல்லப்பட்டது தொடா்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்றாா்.