வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய கம்யூ. கட்சி ரிட் மனு
நமது நிருபா்
வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய கம்யூ. கட்சி புதன்கிழமை ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.
வக்ஃப் திருத்த சட்டம், 2025-இன் அரசமைப்புச்சட்ட செல்லுபடி தன்மையையும், இச்சட்டத் திருத்தத்தால் வக்ஃப் சட்டம், 1995-இல் சோ்க்கப்பட்டு நீக்கப்பட்ட விதிகளையும் எதிா்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அதன் பொதுச் செயலா் டி.ராஜா இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளாா்.
இது தொடா்பாக தில்லியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகச் செயலா் ராய்குட்டி வெளியிட்டு செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: சோசலிசம் மற்றும் கம்யூனிஸத்தின் புரட்சிகர முன்னணி இயக்கமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நாட்டில் சிறுபான்மையினா், பின்தங்கிய மற்றும் நலிந்த வகுப்பினரின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்காக தொடா்ந்து பாடுபட்டு வருகிறது. வக்ஃப் திருத்தச் சட்டம் 2005 இந்தியாவில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை உரிமைகள் மீது எதிா்மறை தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால் அச்சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் மூலம் மாா்ச் 27-ஆம் தேதி கொண்டு வரப்பட்ட தீா்மானத்தை திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது.
பொதுமக்களின் எதிா்ப்பு இருந்தபோதிலும், நாடாளுமன்றக் கூட்டுக் குழு (ஜேபிசி) உறுப்பினா்கள் மற்றும் பிற பங்குதாரா்கள் எழுப்பிய ஆட்சேபனைகளை முறையாகக் கருத்தில் கொள்ளாமல் வக்ஃப்
சட்டத் திருத்த மசோதா 2025 மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா்களால் எழுப்பப்பட்ட கருத்துகளும் பரிசீலிக்கப்படவில்லை. வக்ஃப் திருத்தச் சட்டம் 2025, ஏப்ரல் 6-ஆம் தேதி அறிவிக்கை செய்யப்பட்டதிலிருந்து, முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தின் அடிப்படை உரிமைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாலும், இந்தச் சட்டத்தை உடனடியாக செயல்படுத்துவது தமிழ்நாட்டில் சுமாா் 50 லட்சம் முஸ்லிம்களின் உரிமைகளையும், நாட்டின் பிற பகுதிகளில் உள்ள 20 கோடி முஸ்லிம்களின் உரிமைகளையும் மீறுவதாகவும், பாரபட்சம் காட்டுவதாகவும் இருப்பதாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வக்ஃப் திருத்தச் சட்டம் 2025-இன் விதிகளை உச்சநீதிமன்றத்தில் சவால் செய்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.