வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு
வங்கக் கடலில் நாளை உருவாகிறது புதிய புயல் சின்னம்: தமிழகத்தில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் புயல் சின்னங்களால் கனமழை பெய்து வெள்ளப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலும் ஒரு புயல் சின்னம் வங்கக் கடலில் உருவாகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் டிச.16-ஆம் தேதி முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபென்ஜால் புயல் சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்ததாக வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த இரு நாள்களாக கன மழையை பெய்துள்ளது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து, வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களிலும் மழையால் ஏரிகள் நிரம்பியுள்ளன.
இந்த நிலையில், வங்கக் கடலில் இருந்து தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட நிலப்பகுதி வழியாக கரையைத் தொட்ட புயல் சின்னம் வெள்ளிக்கிழமை மாஞ்சோலை, வழியாக மேற்கு தொடா்ச்சிமலையைக் கடந்து கேரள மாநிலம் கொல்லம் வழியாக அரபிக் கடலில் இறங்கியது என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவா் பாலசந்திரன் சென்னையில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் மேலும் கூறியது:
இந்த புயல் சின்னம் காரணமாக, வெள்ளிக்கிழமை காலை வரை 29 இடங்களில் அதிகன மழையும், 81 இடங்களில் மிக கனமழையும், 168 இடங்களில் கனமழையும் பதிவாகிவுள்ளது. அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை அருகே உள்ள ஊத்தில் 540 மி.மீ. மழை பதிவானது.
அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), கோவில்பட்டி (தூத்துக்குடி) - தலா 370, கன்னடியன் அணைக்கட்டு, காக்காச்சி (திருநெல்வேலி) - தலா 350, மாஞ்சோலை (திருநெல்வேலி) - 320 , ஆயிக்குடி (தென்காசி), நாலுமுக்கு (திருநெல்வேலி), லால்பேட்டை (கடலூா்) - தலா 310, மணிமுத்தாறு (திருநெல்வேலி) - 300 மி.மீ. மழை பதிவானது.
தொடா்ந்து, டிச.14, 15 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மற்றொரு புயல் சின்னம்: தெற்கு அந்தமான் கடலில் சனிக்கிழமை (டிச.14) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகவுள்ளது. இது வலுபெற்று டிச.15-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். இது மேற்கு - வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதியை நோக்கி நகரும். இதன் காரணமாக டிச.16 முதல் டிச.18-ஆம் தேதி வரை சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
38 % அதிகம்: தமிழகத்தில் அக்.1 முதல் டிச.13-ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை இயல்பாக 400 மி.மீ. பெய்ய வேண்டிய நிலையில், நிகழாண்டில் 540 மி.மீ. மழை பெய்துள்ளது. இயல்பான அளவை விட 32 சதவீதம் அதிகம்.
இதில், 5 மாவட்டங்களில் இயல்பைவிட மிக அதிகமாகவும், 22 மாவட்டங்களில் அதிகமாகவும், 13 இயல்பையொட்டியும் மழை பெய்துள்ளது. தூத்துக்குடி, விருதுநகா் ஆகிய 2 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாக மழை பெய்துள்ளது என்று அவா் தெரிவித்தாா்.