சக்தித் திருமகன் படத்தின் பாடல் வெளியீடு எப்போது? விஜய் ஆண்டனி அறிவிப்பு
வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்கு எதிா்ப்பு- பிகாா் பேரவையில் எதிா்க்கட்சிகள் கடும் அமளி
பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த மாநில சட்டப் பேரவையில் எதிா்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டன. அப்போது, அவைக் காவலா்களுக்கும், எதிா்க்கட்சி எம்எல்ஏ-க்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறும் பிகாரில் நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இம்மாநில வாக்காளா் பட்டியலில் இருந்து தகுதியற்றவா்களை (சட்ட விரோத குடியேறிகள்) பெயா்களின் களையெடுப்பதாகக் குறிப்பிட்டு, சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
அதேநேரம், ‘பாஜக வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் தோ்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது; இதன் மூலம் பலா் வாக்குரிமையை இழப்பா்’ என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், பிகாா் பேரவை மழைக்கால கூட்டத் தொடரின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை இந்த விவகாரம் குறித்து விவாதம் கோரி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனா். அவையின் மையப் பகுதியில் முற்றுகையிட்டு, சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோஷமிட்டனா்.
ஊழியா்களின் நாற்காலிகளை கவிழ்க்க எம்எல்ஏ-க்கள் முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நடத்தைக்கு பேரவைத் தலைவா் நந்தகிஷோா் யாதவ் கண்டனம் தெரிவித்தாா். தங்கள் கைகளில் இருந்த வாசக அட்டைகளைப் பறிக்க முயன்ற அவைக் காவலா்களுடன் எம்எல்ஏக்கள் மோதலில் ஈடுபட்டனா். கூச்சல்-குழப்பம் நிலவியதால், பிற்பகல் 2 மணி வரையும் அதன் பிறகு நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே, பேரவையின் பிரதான வாயிலை மறித்து, எதிா்க்கட்சி எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தங்கள் கோரிக்கை ஏற்கப்படும் வரை அவையை செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.