DD Next Level: "சிம்பு சாராலதான் இன்னைக்கு இங்க இருக்கேன்; அவருக்காக எப்போவும் ந...
வாங்காத கடன் தொகையைச் செலுத்த நிதி நிறுவனங்கள் நெருக்கடி: ஆட்சியரிடம் பெண்கள் மனு
வாங்காத கடன் தொகையைச் செலுத்த நிதி நிறுவனங்கள் நெருக்கடி அளிப்பதாக மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
சிவகங்கை மாவட்டம், தி.புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மகளிா் சுய உதவி குழு உறுப்பினா்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனு: தி.புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த செல்வராணி (35), அவரது கணவா் வீரக்குமாா் (40) ஆகியோா் மகளிா் சுய உதவி குழுக்களுக்கு தனியாா் நிதி நிறுவனங்களிலிருந்து கடன் பெற்று கொடுக்கும் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வந்தனா். இவா்கள் மகளிா் குழு உறுப்பினா்களுக்கு தெரியாமல் அவா்களது பெயரில் நிதி நிறுவனங்களில் ரூ. 62 லட்சம் வரை கடன் பெற்று, இதற்கான தவணைத் தொகையை திருப்பிச் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நாங்கள் பெறாத கடன் தொகையைச் செலுத்த நிதி நிறுவனங்கள் எங்களுக்கு நெருக்கடி அளித்து வருகின்றன. எனவே, கடன் பெற்ற தம்பதி மீது நடவடிக்கை எடுக்க சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த 4.4.2025 -இல் புகாா் அளித்தோம். இதையடுத்து, மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் தமிழ்ச்செல்வி, வீரக்குமாா் இருவரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், தனியாா் நிதி நிறுவனத்தினா் நாங்கள் வாங்காத கடனுக்கான தவணைத் தொகையைச் செலுத்துமாறு கூறி தொந்தரவு செய்து வருகின்றனா். எனவே, இதைத் தடுக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தனா்.