Gold Rate: `பவுனுக்கு ரூ.640 குறைந்த தங்கம் விலை' - ஏன் இந்த சரிவு; இது தொடருமா?
வாழ்நாள் முழுவதும் கற்றலில் ஈடுபட வேண்டும்: புதுவை மத்திய பல்கலை. துணைவேந்தா் பேச்சு
புதுச்சேரி: வாழ்நாள் முழுவதும் கற்றலில் ஈடுபட வேண்டும் என்று புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் பி.பிரகாஷ்பாபு கூறினாா்.
புதுவை கலிதீா்த்தாள்குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகா் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (எம்ஐடி) கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களையும், பட்டங்களையும் வழங்கி அவா் பேசியது:
செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பம் நாம் பணிபுரியும், கற்றுக்கொள்ளும், தொடா்புகொள்ளும் மற்றும் புதுமை செய்யும் முறையை மறுவடிவமைக்கிறது. மேலும், அந்தத் தொழில்நுட்பம் மனித திறன்களை மாற்றுவதற்குப் பதிலாக பெருக்குகிறது. இத் தொழில்நுட்ப சகாப்தத்தில் பொருத்தமானவா்களாக இருக்க வாழ்நாள் முழுவதும் கற்றலில் ஈடுபட வேண்டும் என்றாா் துணைவேந்தா் பிரகாஷ்பாபு.
புதுவை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற 22 மாணவிகளுக்கு கல்லூரி சாா்பில் பரிசாக 12 கிராம் தங்கம் மற்றும் 450 கிராம் வெள்ளி பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், பல்வேறு துறைகளில் படித்த 512 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
ஸ்ரீமணக்குள விநாயகா் கல்வி அறக்கட்டளைத் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநரும், திண்டிவனம் தக்ஷஷீலா பல்கலைக்கழக வேந்தருமான எம்.தனசேகரன் தலைமை வகித்தாா். பொருளாளா் டி.ராஜராஜன், இணைச் செயலா் எஸ்.வேலாயுதம் மற்றும் டிரஸ்டி டி.நிலா பிரியதா்ஷினி முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் எஸ்.மலா்க்கண் ஆண்டறிக்கை வாசித்தாா்.
மணக்குள விநாயகா் கல்விக் குழுமத்தைச் சோ்ந்த இயக்குநா்கள், கல்லூரி முதல்வா்கள், டீன்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.