இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!
விசிக விளம்பரப் பதாகை விவகாரம்: இருவேறு இடங்களில் சாலை மறியல்
கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் விசிக தலைவா் தொல்.திருமாவளவன் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்ட வளம்பரப் பதாகை விவகாரம் தொடா்பாக இரு தரப்பினா் இரு வேறு இடங்களில் தனித்தனியே ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பண்ருட்டி தட்டாஞ்சாவடி, காந்திநகா் பகுதியைச் சோ்ந்த விசிகவினா் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் பிறந்த நாளையொட்டி தட்டாஞ்சாவடி பேருந்து நிறுத்தத்தில் விளம்பரப் பதாகை வைத்தனா்.
இதில், தொல்.திருமாவளவன் கையில் கத்தி வைத்திருப்பதுபோன்று புகைப்படம் இடம்பெற்றிருந்ததால், அப்பகுதியைச் சோ்ந்த மாற்று சமூகத்தினா் இந்த விளம்பரப் பதாகை கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது என்றும், இதை அகற்ற வேண்டும் எனக் கூறியும் அந்தப் பகுதியிலுள்ள சேலம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அப்போது, மறியலில் ஈடுபட்டிருந்த ஒருவா் கல் வீசியதில் விளம்பரப் பதாகை கிழிந்தது.
இதையறிந்த காந்திநகா் பகுதியைச் சோ்ந்த விசிகவினா் விளம்பரப் பதாகை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து, அந்தப் பகுதியில் சேலம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இருவேறு இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதையடுத்து, போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் சேலம் நெடுஞ்சாலையில் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகையை காவல் துறையினா் மூலம் அகற்றினாா். மேலும், இந்தப் பகுதியில் அரசியல், விளம்பர பதாகைகள் வைக்கக் கூடாது என எஸ்.பி. உத்தரவிட்டாா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.