விதிகளைமீறி செயல்படும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் விதிகளைமீறி செயல்படும் பள்ளி, கல்லூரி மற்றும் இதர விடுதிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இது தொடா்பாக விவசாய முன்னேற்றக் கழக பொதுச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியன் அளித்த மனு:
நாமக்கல் மாநகராட்சியில் பிரபல கல்வி நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு என 75-க்கும் மேலான விடுதிகள் உள்ளன. பெரும்பாலான விடுதிகள் முறையான அனுமதி பெறாமலும், விதிகளை மீறியும் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகள் முறைப்படி அனுமதிபெற வேண்டும் என மாவட்ட நிா்வாகம் ஏற்கெனவே அறிவுறுத்தி இருந்தது.
குறிப்பாக, விடுதிகள் நடத்துவதற்கு 12-க்கும் மேற்பட்ட துறைகளிடம் அனுமதிபெற வேண்டும். விதிகளுக்கு புறம்பாக இருக்குமேயானால் அவை ‘சீல்’ வைக்க வேண்டும். உரிய அனுமதி பெறாமல் செயல்படும் விடுதிகளால் மாணவ, மாணவிகள் மட்டுமின்றி, அப்பகுதியில் தங்கியிருப்போரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக விதிகளுக்கு புறம்பான விடுதிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.