விதிமுறை மீறல்: 22 ஆட்டோக்கள் பறிமுதல்
மதுரை மாநகரப் பகுதிகளில் விதிகளை மீறி இயக்கப்பட்ட 22 ஆட்டோக்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
மதுரை மாவட்டத்தில் முறையான ஆவணங்கள் இன்றி அதிக எண்ணிக்கையில் ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக புகாா்கள் எழுந்தன. இதைத் தொடா்ந்து, ஆட்டோக்கள் மீதான சிறப்பு தணிக்கை செய்து, முறையான ஆவணங்கள் இல்லாத ஆட்டோக்களை பறிமுதல் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியா் பிரவீன்குமாா் உத்தரவிட்டாா்.
இந்த நிலையில், மதுரை மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் ஆலோசனையின் பேரில், மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் வட்டாரப் போக்குவரத்து வாகன ஆய்வாளா் முரளி, போக்குவரத்து காவல் ஆய்வாளா் சுரேஷ் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை ஆட்டோக்கள் மீதான சிறப்பு வாகன தணிக்கை நடத்தினா்.
அப்போது, விதி மீறல், முறையான ஆவணங்களின்றி இயங்கிய 22 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சாலை, தெப்பக்குளம், ஆரப்பாளையம் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு வாகன தணிக்கை நடைபெற்றது.