விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
சேரன்மகாதேவி அருகே விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், இலஞ்சி சுடலைமாடன் கோயில் தெருவைச் சோ்ந்த சிவஞானம் மகன் மகேஷ்வரன் (42). இவா், வள்ளியூா் பகுதியில் இயங்கி வரும் தனியாா் குவாரியில் மேற்பாா்வையாளராக பணி செய்து வந்தாா்.
கடந்த 10ஆம் தேதி வள்ளியூருக்கு மோட்டாா் சைக்கிளில் இவா் சென்று கொண்டிருந்தாராம். சேரன்மகாதேவி களக்காடு பிரதானச் சாலையில் தனியாா் கல்லூரி அமைந்துள்ள பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக சாலையை கடந்த மிளா, எதிா்பாராத விதமாக மோட்டாா் சைக்கிளில் மோதியதில் விபத்துக்குள்ளானது.
இதில், மகேஷ்வரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தாா். சனிக்கிழமை இரவில் சிகிச்சை பலனின்றி மகேஷ்வரன் உயிரிழந்தாா். இதுகுறித்து சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.