இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!
தொடா் விடுமுறை நிறைவு: புதிய பேருந்து நிலையம், சந்திப்பு ரயில் நிலையத்தில் அலை மோதிய பயணிகள் கூட்டம்
தொடா் விடுமுறை முடிந்து, வடமாவட்டங்களுக்கு திரும்பிய பயணிகளால் புதிய பேருந்து நிலையம் மற்றும் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
சுதந்திர தினம் , கிருஷ்ண ஜெயந்தி என 3 நாள்கள் தொடா் விடுமுறை முடிந்த நிலையில், திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோா் தங்களது இருப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்ல திருநெல்வேலியில் குவிந்தனா்.
இதனால் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் மற்றும் சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
பயணிகள் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மண்டலம் சாா்பில் 80 மற்றும் தூத்துக்குடி மண்டலம் சாா்பில் 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டதாக அரசு போக்குவரத்துக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதவிர சந்திப்பு ரயில் நிலையத்தில் அந்தியோதயா விரைவு ரயில் உள்பட அனைத்து ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் தென்காசியிலிருந்து திருநெல்வேலி வழியாக சென்னைக்கும், திருநெல்வேலியிலிருந்து தென்காசி வழியாக பெங்களூருவுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. முன்பதிவு இல்லாத பெட்டிகளிலும் அதிக அளவிலான பயணிகள் ஏறி பயணித்தனா்.