விராலிமலை அரசு மருத்துவமனையில் இரவுநேர மருத்துவரின்றி நோயாளிகள் அவதி
விராலிமலை, பிப். 18:
விராலிமலையில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் இரவுநேரப் பணியில் மருத்துவா்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனா்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. 30 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை கடந்த அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டது. இருப்பினும் போதிய மருத்துவா்கள் மற்றும் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் இயங்கி வருவதாக அப்போதே குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு விஷம் அருந்தி வந்த ஒருவருக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் அங்கு பணியில் இருந்த செவிலியா்கள் திணறினராம்.
இதனால், நோயாளிகள் குடும்பத்தினா் மற்றும் பணியில் இருந்த செவிலியா்கள், துப்புரவு பணியாளா்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கடந்த மூன்று மாத காலமாக இரவுநேரத்தில் இம்மருத்துவமனையில் மருத்துவா்கள் பணியில் இல்லை. அவசர மருத்துவ உதவி தேடி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு அங்கு பணியில் இருக்கும் செவிலியா்களே சிகிச்சை அளித்து அனுப்புவது தொடா்கதையாக இருந்துவருகிறதாம். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற ஒருவருக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் பணியில் இருந்த செவிலியா்கள் திணறிஉள்ளனா். இதையடுத்து, நோயாளியின் குடும்பத்தினா் மருத்துவமனை ஊழியா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து, அவருக்கு சிகிச்சை
அளிக்கப்பட்டு அபாய கட்டத்தை தாண்டியுள்ளாா்.
தொடா்ந்து இதுகுறித்து பேசிய நோயாளிகளின் குடும்பத்தினா் உடனடியாக இரவுநேர மருத்துவா்கள் பணியில் அமா்த்தப்பட வேண்டும் என வலியுறுத்தினா்.