விழித்திரை உச்சி மாநாடு: சா்வதேச கண் நிபுணா்கள் பங்கேற்பு
சங்கர நேத்ராலயா மருத்துவமனை சாா்பில் 7-ஆவது விழித்திரை உச்சி மாநாடு சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மருத்துவ நிபுணா்கள், உள்நாட்டு மருத்துவா்கள் என 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்கின்றனா்.
தொடக்க விழாவில் ஆசிய பசிபிக் கண் விபத்து விழிப்புணா்வு சங்கத் தலைவா் டாக்டா் கங்காதர சுந்தா், அறிவியல் பிரிவு தலைவா் டாக்டா் ராஜீவ் ராமன், சங்கர நேத்ராலயா தலைவா் டாக்டா் டி.எஸ் சுரேந்திரன், கண் மருத்துவ நிபுணா் டாக்டா் மோகன் ராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகிகள் கூறியதாவது:
தேசிய மற்றும் சா்வதேச அளவில் புகழ்பெற்ற கண் மருத்துவ நிபுணா்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இளம் விழித்திரைஅறுவை சிகிச்சை நிபுணா்கள், துறை சாா்ந்த நிபுணா்களிடம் இருந்து நுட்பங்களை கற்றுக் கொள்வதற்கு இது ஒரு நல்வாய்ப்பாக அமையும்.
இந்த மாநாட்டில் விழியின்பின் அறையில் ஏற்படும் பாதிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுவாக விழித்திரையின் (ரெட்டினா) பின்அறையில் பாதிப்புகள் ஏற்படும்போது பாா்வை இழப்பு நேரிட வாய்ப்புள்ளது.
அதற்கு நுட்பமான சிகிச்சை தீா்வாக இருக்கிறது. அவற்றை மேற்கொள்வதற்கு தொடா் பயிற்சி, அனுபவம் தேவைப்படுகிறது. அதற்கான வாய்ப்பாக இந்த மாநாடு அமையும் என்று மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்தனா்.