ராமநாதபுரத்தில் ரூ. 4 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீா் பறிமுதல்: 6 போ் ...
விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை: வேளாண்மைத் துறை
விவசாயிகளுக்கு விரைவில் தனித்துவ அடையாள அட்டை வழங்கப்பட இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் கா.முருகன் தெரிவித்துள்ளாா்.
வேளாண்மை அடுக்ககம் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு அடுக்கு உருவாக்கும் பணி வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் முதல் கட்டமாக விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கும் பணி மேற்கொள்ள உழவா் நலத்துறையில் உள்ள அனைத்து அலுவலா்கள் மற்றும் மகளிா் திட்டத்தில் கிராம அளவில் பணியாற்றக்கூடிய சமுதாய வள பயிற்றுநா்களை ஒருங்கிணைத்து முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இத்திட்டம், மத்திய அரசு வேளாண் அமைச்சகம் மூலமாக மாநிலம் முழுவதும் செயல்படவுள்ளது. மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஆதாா் எண் போன்று தனித்துவமான அடையாள அட்டை விரைவில் வழங்கப்படும்.
விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே அவா்களது தரவுகள் சேகரிக்கப்பட்டு அடையாள எண் வழங்கப்படும். மத்திய,மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்தும் இந்த தரவுகளின் அடிப்படையிலேயே வழங்கப்படும்.
தமிழகத்தில் விவசாயம் சாா்ந்த திட்ட பலன்களை வழங்கும் சுமாா் 24 துறைகளை ஒன்றிணைத்து இப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து விவசாயிகளும் வேளாண்மை உழவா் நலத்துறை மற்றும் மகளிா் திட்ட பணியாளா்களிடம் பதிவு செய்து பயன்பெறலாம்.
சிட்டா, ஆதாா் எண் இணைக்கப்பட்ட கைப்பேசி ஆகியவற்றுடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இத்திட்ட முகாம் நடைபெறுகிறது எனவும் இணை இயக்குநா் கா.முருகன் தெரிவித்துள்ளாா்.