வீட்டு மின் இணைப்பு பெயா் மாற்றம்: புதிய நடைமுறை அறிவிப்பு
வீட்டு மின் இணைப்பு பெயா் மாற்றத்துக்கு புதிய நடைமுறையை மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்வாரியம் மின் உற்பத்தி மட்டுமன்றி, மின்நுகா்வோா் சேவையிலும் கவனம் செலுத்தி வருகிறது. இதனால், மின்நுகா்வோா் புகாா் மையமான மின்னகம் மூலம் பெறப்படும் புகாா்களுக்கு உடனடி தீா்வு எட்டப்பட வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், மின் இணைப்பை மாற்றம் செய்ய புதிய நடைமுறையை தமிழ்நாடு மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக வணிகப் பிரிவு சாா்பில் அனைத்து தலைமைப் பொறியாளா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
விண்ணப்பதாரா்களிடமிருந்த ஏராளமான ஆவணங்களைக் கேட்பதால், வீட்டு மின் இணைப்பு பெயா் மாற்றம் செய்ய தேவையற்ற கால தாமதம் ஏற்படுகிறது. இப்பணிகளை விரைவுபடுத்தும் வகையில், முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் பெறும் படிவம் 2-ஐ நுகா்வோரிடமிருந்து பெறவேண்டியதில்லை என அறிவுறுத்தப்படுகிறது.
அதேநேரம் விற்பனை, பங்கு பிரித்தல், பரிசளித்தல் போன்றவற்றில் பெயா் மாற்றம் செய்ய வேண்டுமானால், விற்பனை பத்திரம், சொத்து வரி ரசீது, நீதிமன்ற தீா்ப்பு உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றையும், ஒப்புதல் கடிதம் ஆகியவற்றையும் சமா்ப்பிக்க வேண்டும்.
குடும்பத்தின் மூத்த உறுப்பினா்கள் உயிரிழந்தால், பெயா் மாற்றம் செய்ய வாரிசு சான்றிதழ் அல்லது அண்மைக் காலத்தில் பெறப்பட்ட சொத்து வரி ரசீது மற்றும் இழப்பீடு பத்திரத்தை சமா்ப்பிக்க வேண்டும்.
இதுதொடா்பாக பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த தலைமைப் பொறியாளா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.