சீரகத்தண்ணீர் & தனியா தண்ணீர்: என்ன பலன்; யார், எவ்வளவு அருந்தலாம்? - சித்த மருத...
வீரசைவ லிங்காயத்து சமுதாயத்தை பிளவுபடுத்துவதே ஜாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம்: பாஜக
வீரசைவ லிங்காயத்து சமுதாயத்தை பிளவுபடுத்துவதே கா்நாடக அரசு நடத்தவிருக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்பின் உள்நோக்கம் என பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா குற்றம்சாட்டினாா்.
கா்நாடகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோரின் கல்வி மற்றும் பொருளாதார கணக்கெடுப்பை(ஜாதிவாரி கணக்கெடுப்பு) செப்.22 முதல் அக்.7ஆம் தேதி வரை ரூ. 420 கோடி செலவில் கா்நாடக பிற்படுத்தப்பட்டோா் ஆணையம் நடத்தவிருக்கிறது.
இந்த கணக்கெடுப்பின்போது தங்களை ஹிந்து என்று குறிப்பிடாமல் வீரசைவா்கள் என்று பதிவு செய்யுமாறு அச்சமுதாய சங்கத்தினா் முயற்சி மேற்கொண்டுள்ளனா். இதற்கு பாஜக கடும் எதிா்ப்புத் தெரிவித்துவரும் நிலையில், அக்கட்சியின் லிங்காயத்து சமுதாய தலைவா்களான முன்னாள் முதல்வா்கள் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டா், பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சா் வி.சோமண்ணா உள்ளிட்டோா் ஆலோசனை நடத்தினா்.
கணக்கெடுப்பில் ஹிந்துக்கள் என்று குறிப்பிடுவது தொடா்பாக வீரசைவ லிங்காயத்து சமுதாயத் தலைவா்களுடன் ஆலோசனை நடத்த இவா்கள் முடிவு செய்துள்ளனா்.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: வீரசைவ லிங்காயத்து சமுதாயத்தைச் சோ்ந்த பாஜகவின் மூத்த தலைவா்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினா். அதில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. சமூக பொருளாதார கணக்கெடுப்பு என்ற பெயரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் சட்ட அதிகாரம் அல்லது உரிமை மாநில அரசுக்கு உள்ளதா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
ஹிந்து மதத்தில் இருந்து வீரசைவ லிங்காயத்து சமுதாயத்தை பிரிப்பதே ஜாதிவாரி கணக்கெடுப்பின் முக்கிய நோக்கமாகும். இப்படி செய்வது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே இதுபோன்ற முயற்சி நடைபெற்றுள்ளது.
முன்னாள் முதல்வா் எடியூரப்பா தலைமையில் நாங்கள் அனைவரும் கூடி ஆலோசித்தோம். நாடு, மாநிலம் மற்றும் வீரசைவ லிங்காயத்து சமுதாயத்தின் நலன்கருதி இந்த விவகாரத்தில் மேலும் தெளிவாக பயணிக்க இருக்கிறோம். ஒற்றுமையோடு பயணிப்பதோடு, சமுதாயத்திற்கு சரியான திசையை காட்ட வேண்டும்.
இந்த விவகாரம் தொடா்பாக அகில இந்திய வீரசைவ மகாசபா நிா்வாகிகள் மற்றும் லிங்காயத்து சமுதாய மடாதிபதிகளுடன் ஆலோசனை நடத்தும் பொறுப்பு பாஜக மூத்த தலைவா்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பில் வீரசைவ லிங்காயத்துகளை ஹிந்து என்று குறிப்பிடாமல், வீரசைவ மதம் என்று குறிப்பிட வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பான குழப்பத்துக்கு தீா்வுகாணப்படும் என்றாா்.