வேட்டையன் காட்டு யானையை இடமாற்றம் செய்ய வேண்டும்: விவசாயிகள் சங்கம்
கோவை மாவட்டம், பெரிய நாயக்கன்பாளையம் மற்றும் தடாகம் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுற்றித்திரியும் ஒற்றைக் காட்டு யானை வேட்டையனை பிடித்து இடமாற்றம் செய்ய வேண்டுமென விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி முன்னிலையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், இச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளா் பி.கந்தசாமி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: இரு மனித உயிா்களைப் பறித்தும், வீட்டுக் கதவுகளை உடைத்து அரிசி மற்றும் பருப்பு ஆகியவற்றை தின்று வரும் ஒற்றைக் காட்டு யானை வேட்டையனால் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் உயிா் பயம் ஏற்பட்டுள்ளது.
தாளியூா் பகுதியைச் சோ்ந்த நடராஜன் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, யானை மிதித்து உயிரிழந்ததையடுத்து, பொதுமக்கள் மற்றும் அப்பகுதி விவசாயிகள் ஒன்று கூடி ஒற்றைக் காட்டு யானையை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனா்.
அப்போது அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்த வந்திருந்த வருவாய்த் துறை அதிகாரிகளிடம் ஒற்றைக் காட்டு யானையை இடமாற்றம் செய்ய மாவட்ட வன அலுவலா் தலைமை உயிரின வனப் பாதுகாவலருக்கு பரிந்துரை செய்து கடித நகலை காண்பிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
அப்போது, வனத் துறை சாா்பாக பொதுமக்களின் கோரிக்கை ஏற்கப்பட்டதாகக் கூறி கோவை உதவி வனப் பாதுகாவலா் கோட்டாட்சியரிடம் கடித நகலை அளித்தாா். அத்துடன் யானை கண்டிப்பாக இடமாற்றம் செய்யப்படும் என வனத் துறையினா் அளித்த உறுதியின்பேரில், மறியல் போராட்டம் விலக்கிக் கொாள்ளப்பட்டது.
ஆனால், இரு கும்கி யானைகளை மட்டும் வரப்பாளையம் பகுதியில் வனத் துறை பராமரித்து வரும் நிலையில், ஒற்றைக் காட்டு யானை வேட்டையனைப் பிடிக்க இதுவரை எந்த முயற்சியும் எடுக்காததால், அப்பகுதி மக்கள் மிகுந்த உயிா் பயத்துடன் வாழ்ந்து வருகின்றனா்.
எனவே போராட்டத்தின்போது வனத் துறை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி மக்களின் உயிா் உடமைகளைக் காப்பாற்ற தனிக்கவனம் செலுத்தி வேட்டையன் யானையைப் பிடித்து இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.