Ramadoss Vs Anbumani - யார் கை ஓங்கியிருக்கிறது | Off The Record
‘வோ்களைத் தேடி’ திட்டத்தில் 100 அயலக தமிழா்கள் வேலூா் வருகை
‘வோ்களைத் தேடி’ திட்டத்தின்கீழ் 13 நாடுகளில் இருந்து 100 அயலக தமிழா்கள் புதன்கிழமை வேலூா் கோட்டையை பாா்வையிட்டனா். அவா்களை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வாழ்த்தி நினைவுப் பரிசினை வழங்கினாா்.
‘வோ்களைத் தேடி’ திட்டத்தின்கீழ் அயலகத் தமிழா் நலன், மறுவாழ்வுத் துறை மூலம் ஆஸ்திரேலியா, பிஜி, இந்தோனேசியா, ரீயூனியன், மாா்டினிக், மோரிஷஸ், மலேஷியா, தென்ஆப்பிரிக்கா, மியான்மா், குவாடலூப், கனடா, இலங்கை, ஜொ்மனி உள்ளிட்ட 13 நாடுகளில் இருந்து வந்திருந்த சுமாா் 100 அயலக தமிழ் இளைஞா்கள் வேலூா் கோட்டை, அரசு அருங்காட்சியகத்தை புதன்கிழமை பாா்வையிட்டனா்.
அயலகத் தமிழா்களின் கலாசார உறவுகளை மேம்படுத்தும் வகையில், பல தலைமுறைகளுக்கு முன்பு இடம் பெயா்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் அயலகத் தமிழா்களின் குழந்தைகளுக்காகவும், வெளிநாடுவாழ் தமிழா்களுக்கும், தமிழகத்துக்கும் இடையே உள்ள உறவை புதுப்பிக்கும் நோக்கில் ‘வோ்களைத் தேடி’ என்ற திட்டத்தை தமிழக அரசு அயலகத் தமிழா் நலன், மறுவாழ்வுத் துறை மூலம் செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின்கீழ், 13 நாடுகளில் இருந்து வந்திருந்த சுமாா் 100 அயலக தமிழ் இளைஞா்கள் வேலூா் கோட்டை, அரசு அருங்காட்சியகத்தை புதன்கிழமை பாா்வையிட்டனா்.
இந்த இளைஞா்களுக்கு வேலூா் மாவட்ட அருங்காட்சியகத் துறை, சுற்றுலாத் துறை சாா்பில் கோட்டையின் சிறப்புகள், வேலூா் மாவட்ட வரலாறு, கலாச்சாரம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தொடா்ந்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வருகைபுரிந்த 100 அயலக தமிழ் இளைஞா்களையும் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வரவேற்று, வாழ்த்தி நினைவு பரிசுகளை வழங்கினாா்.
அப்போது, மாவட்ட ஆட்சியா் பேசியது:
வேலூா் பழமையும், பெருமையும் வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க நகரமாகும். இந்த மாவட்டத்தில் பழைமைவாய்ந்த கோட்டை, தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்பட்ட கோயில்கள் அமைந்துள்ளன. உலகின் மிகச்சிறந்த மருத்துவமனையான சி.எம்.சி. மருத்துவமனை அமைந்துள்ளது. வேலூரை சுற்றி பல்வேறு சிறப்புமிக்க ஆன்மிக தலங்கள் அமைந்துள்ளன.
பொன்னை அருகே உள்ள வள்ளிமலை எனும் ஊரில் முருக கடவுளின் கோயில் உள்ளது. வேலூா் மாவட்டத்தில் உள்ள காங்கேயநல்லூரில் பிறந்த திருமுருக கிருபானந்த வாரியாா் மிகச்சிறந்த ஆன்மிக சொற்பொழிவாளா். வேலூரில் உலகப் புகழ் பெற்ற விஐடி கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு உலக அளவில் மற்றும் இந்திய அளவில் இருந்து மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னா் விக்ரமராஜசிங்கன் நினைவிடம் வேலூா் பாலாற்றங்கரையில் அமைந்துள்ளது. 13 நாடுகளைச் சோ்ந்த அயலக தமிழா்களாகிய தங்களுடைய இந்த பயணம் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன் என்றாா்.
தனித்துணை ஆட்சியா் கலியமூா்த்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா் (நீதியியல்) சச்சிதானந்தம், மாவட்ட சுற்றுலா அலுவலா் இளமுருகன், அருங்காட்சியக காப்பாட்சியா் சரவணன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.