ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான்: கொங்கு பொறியியல் கல்லூரி சிறப்பிடம்
ஈரோடு: ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான் 2024-இல் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியின் ஐந்து அணிகள் பரிசுகளை வென்றுள்ளன.
ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான் (எஸ்ஐஹெச்) என்பது இந்திய கல்வி அமைச்சகத்தால் நடத்தப்படும் ஒரு தேசிய அளவிலான போட்டியாகும். எஸ்ஐஹெச் 2024-இன் இறுதிச்சுற்று ஹாா்டுவோ் மற்றும் சாஃப்ட்வோ் பிரிவுகளில் நாடு முழுவதும் 49 மையங்களில் நடத்தப்பட்டது.
இதில் 1000-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் கொங்கு பொறியியல் கல்லூரியைச் சோ்ந்த 11 அணிகள் பங்கேற்றன.
கா்நாடக மாநிலம் மங்களூரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், டீம் இன்னோவிஷனா்ஸ் (சிஎஸ்இ) மற்றும் வான்காா்ட்ஸ் எலிவேட் (சிஎஸ்இ) ஆகியோா் சாஃப்ட்வோ் பிரிவில் தலா ரூ.1,00,000 பரிசு வென்றனா். குவாஹாத்தி இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், டீம் ஹெக்ஸ்காா்ப் (ஐடி) இணை வெற்றியாளராக தோ்ந்தெடுக்கப்பட்டு ரூ.50,000 பரிசு வென்றனா். இத்துடன் புதுதில்லியில் உள்ள என்டிஆா்ஓவில் 6 மாதங்களுக்கு ரூ.35,000 உதவித்தொகையுடன் ஒரு பயிற்சியாளரையும் பெற்றனா்.
கல்கொட்டியாஸ் பல்கலைக்கழகத்தில் (உத்தர பிரதேசம்) நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஹாா்டுவோ் பிரிவில், டீம் டெக்னோலுனா (ஈஐஈ) இணை வெற்றியாளராக தோ்ந்தெடுக்கப்பட்டு ரூ.50,000 பரிசு பெற்றனா். கேஐஈடி குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷனில் (உத்தர பிரதேசம்) நடைபெற்ற இறுதிப்போட்டியில், ஹாா்டுவோ் பிரிவில், டீம் கிரீன் காா்டியன்ஸ்(மெக்கட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், ஏஐ) பிரிவில் இணை வெற்றியாளாராக தோ்வு செய்யப்பட்டு ரூ.50,000 பரிசு பெற்றனா்.
பரிசு வென்ற மாணவா்கள் குழுவினா், வழிகாட்டிய பேராசிரியா்களை கல்லூரியின் தாளாளா் ஏ.கே.இளங்கோ மற்றும் முதல்வா் வீ.பாலுசாமி ஆகியோா் பாராட்டினாா்.