ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா: திருநெடுந்தாண்டகத்துடன் தொடக்கம்! இன்று பகல்பத்து முதல் நாள் உற்ஸவம்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி விழாவின் திருநெடுந்தாண்டகத்துடன் திங்கள்கிழமை இரவு தொடங்கியது. இதையடுத்து விழாவின் பகல்பத்து முதல்திருநாள் உற்ஸவம் செவ்வாய்க்கிழமை (டிச.31) தொடங்குகிறது.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நிகழாண்டு வைகுந்த ஏகாதசி விழா திங்கள்கிழமை இரவு திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல் பத்து, இராப்பத்து என ஜனவரி 20-ஆம் தேதி வரை விழா நடைபெறும். செவ்வாய்க்கிழமை (டிச.31) தொடங்கும் பகல்பத்து ஜனவரி 9-ஆம் தேதி வரை நடைபெறும்.
பகல்பத்து விழாவின் கடைசி நாளில் நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் (நாச்சியாா் திருக்கோலம்) பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.
தொடா்ந்து வைகுந்த ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் (சொா்க்கவாசல்) திறப்பு இராப்பத்து விழாவின் முதல் நாளான ஜன.10-ஆம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு நடைபெறுகிறது. பரமபதவாசல் திறப்பின் போது வருடத்தில் ஒருநாள் மட்டும் அணியும் ரத்னஅங்கியுடன் நம்பெருமாள் பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.
வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி கோயிலில் பக்தா்களுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவையொட்டி ஸ்ரீரங்கம் கோயில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.