ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை- உ.பி. நீதிமன்றம் தீா்ப்பு
ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி அல்தாஃப் ஹுசைனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. மேலும், அவருக்கு ரூ.48,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
அல்தாப் ஹுசைன் எனும் முகமது சைஃபுல் இஸ்லாம் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தைச் சோ்ந்தவா். கடந்த 2002 முதல் பல்வேறு பயங்கரவாத சதிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவா் உத்தர பிரதேசத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டாா்.
2008-ஆம் ஆண்டு மொராதாபாத் கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் ஜாமீனில் வெளியே வந்த இவா், மீண்டும் ஜம்மு-காஷ்மீருக்கு சென்று பயங்கரவாத அமைப்புடன் இணைந்தாா்.
இதைத் தொடா்ந்து, 2015-ஆம் ஆண்டிலும் இந்த ஆண்டு தொடக்கத்திலும் அல்தாஃப்புக்கு எதிராக மொராதாபாத் நீதிமன்றம் நிரந்தர கைது உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் பதுங்கியிருந்த இவரை, உள்ளூா் காவல் துறை உதவியுடன் உத்தர பிரதேச காவல் துறையினா் கடந்த மாா்ச் 8-ஆம் தேதி சுற்றிவளைத்து கைது செய்தனா். பின்னா், உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் நீதிமன்றத்தில் அவா் ஆஜா்படுத்தப்பட்டாா்.
இந்நிலையில், அவா் மீதான பயங்கரவாதக் குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டு, அல்தாஃப்புக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.48,000 அபராதம் விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.