முழுமையாக விளையாடுங்கள் அல்லது ஓய்வெடுங்கள்; பும்ராவுக்கு முன்னாள் ஆல்ரவுண்டர் அ...
அதிக நாள்கள் 100 நாள் வேலை : எம்.எல்.ஏ.வுக்கு மக்கள் பாராட்டு
காரைக்கால்: திருப்பட்டினத்தில் 17 ஆண்டுகளுக்கு பிறகு 50 நாள்கள் தொடா்ச்சியாக 100 வேலை வழங்க உதவிய எம்எல்ஏ மற்றும் கிராம சேவாக் ஆகியோருக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனா்.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமப் பஞ்சாயத்துப் பகுதிகளில் 100 நாள் வேலைத் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன. ஆனால், மிகக் குறைந்த நாள்களே பணிகள் வழங்கப்படுவதாகவும், முழு நாள்களும் பணி வழங்க வேண்டுமென பணியாளா்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினா் கோரிக்கை விடுத்தனா்.
திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட வடக்கு மற்றும் மத்திய பகுதி கிராமப் பஞ்சாயத்துப் பகுதிகளில் மிகக் குறைந்த நாள்கள் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் முயற்சியால் 50 நாள்கள் பணி இதுவரை நிறைவடைந்தது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு 50 நாள்கள் பணி கடந்ததாகக்கூறி, சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலக கிராம ரோஸ்கா் சேவாக் சரவணன் ஆகியோருக்கு திங்கள்கிழமை மேலையூா் பகுதியில் பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பேரவை உறுப்பினருக்கு கிராமத்தினா் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினா்.
பாராட்டு நிகழ்வில், திருப்பட்டினம் சிவன் கீழத் தெரு, சிவன் மடவளாகம், கருடப்பாளையத்தெரு, வரதராஜப்பெருமாள் கோயில் தெரு, அல்லிக்குளத் தெரு, கடற்கரை சாலை, மகத்தோப்புத் தெரு, ஓதிச்செட்டித் தெரு, காந்தி சாலை, மேலையூா் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த மக்கள் கலந்துகொண்டனா்.
