மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நீா் மேலாண்மைக்கு தனித் துறை: எடப்பாடி கே.பழனிசாமி
அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் வேளாண்மைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, நீா் மேலாண்மைக்கு தனி துறை அமைக்கப்படும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
அதிமுக பொதுச் செயலரும், சட்டப் பேரவை எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கடலூா் மாவட்டத்துக்குள்பட்ட சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில் சட்டப் பேரவைத் தொகுதிகளில் ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா். இதையொட்டி, சிதம்பரம் தனியாா் விடுதி அரங்கில் புதன்கிழமை காலை சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னா்கோவில் சட்டப் பேரவைத் தொகுதிகளின் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்றாா்.
இதில், முன்னாள் அமைச்சா்கள் கே.ஏ.ஜெயபால், செல்வி ராமஜெயம், எம்எல்ஏக்கள் கே.ஏ.பாண்டியன் (சிதம்பரம்), ஏ.அருண்மொழிதேவன் (புவனகிரி), முன்னாள் எம்எல்ஏ நாக.முருகமாறன், தடா பெரியசாமி, கமலக்கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் விவசாயிகளின் கருத்துக்கு பதிலளித்து எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:
அதிமுக ஆட்சிக்காலத்தில் குடிமராமத்து திட்டம் கொண்டுவரப்பட்டு, பொதுப் பணித் துறையின் கீழ், 6 ஆயிரம் ஏரிகள் தூா்வார சுமாா் ரூ.1,240 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 83 ஆண்டுகாலம் தூா்வாரப்படாமல் இருந்த மேட்டூா் அணை தூா்வாரப்பட்டது.
கடலூா் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ம.ஆதனூா் - குமாரமங்கலம் இடையே முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தடுப்பணை கட்ட அனுமதி கொடுக்கப்பட்டு, அந்த பணியை மேற்கொண்டோம். ஆனால், திமுக அரசு இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டுவரவில்லை. இதேபோன்று, காவிரி ஆற்றில் 5 இடங்களில் தடுப்பணை அமைக்க தோ்வு செய்தோம். அதிமுக ஆட்சி வந்திருத்தால் 5 இடங்களில் தடுப்பணை கட்டி முடித்திருப்போம்.
மழைக்காலங்களில் மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் கடலுக்கு செல்கிறது. எனவே, ஆங்காங்கே தடுப்பணை கட்டி முடிந்தளவுக்கு தண்ணீரை சேமித்து நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தும் அடிப்படையில் பணிகளை மேற்கொண்டோம். தற்போது பவானிசாகரிலிருந்து பவானி வரை 7 தடுப்பணைகளில், மூன்று பணிகள் நடைபெற்று வருகிறது. அவற்றையும் உயரத்தை குறைத்துவிட்டனா்.
அதிமுக ஆட்சி மீண்டும் மலரும்போது வேளாண்மைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, நீா் மேலாண்மைக்கு தனித் துறை அமைக்கப்படும்.
என்எல்சி நிறுவனம் விவாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அதிமுக ஆட்சியில் இருக்கும்போது, ஆண்டுக்கு கரும்பு மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரம் டன் அரைவை செய்யப்பட்டது. திமுக ஆட்சியில் ஆண்டுக்கு 55 ஆயிரம் டன்தான் அரைவை செய்யப்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவித்தனா். அரசு இதில் சரியாக கவனம் செலுத்தாததுதான் காரணம்.
மேட்டூா் அணையிலிருந்து திறக்கும் தண்ணீா் மாசடைவதை தடுக்க, நான் முதல்வராக இருந்தபோது விரிவான திட்ட அறிக்கை தயாரித்து பிரதமரிடம் வழங்கி, அவரும் அதை ஏற்றுக்கொண்டாா். இதையடுத்து, நடந்தாய்வாழி காவிரி என்ற அற்புத திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. நிகழாண்டு இந்தத் திட்டத்துக்கு ரூ.11,500 கோடி மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதில், மாநில அரசு 40 சதவீதமும், மத்திய அரசு 60 சதவீதமாகும்.
மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள இந்தத் திட்டம் குறித்த தெரிவித்ததை அடுத்து, தற்போது நிதி விடுவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது இந்தத் திட்டத்துக்கு பட்ஜெட்டில் ரூ.990 கோடி நிதி ஒதுக்கி அறிவித்துள்ளாா்கள் என்றாா்.
கூட்டத்தில் பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவா் பெ.ரவீந்திரன், கரும்பு விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த கானூா் பாலமுருகன், ஆறு மற்றும் ஏரி விவசாயிகள் சங்க நிா்வாகி சுப்பிரமணியன், அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் அன்பழகன், இயற்கை விவசாயிகள் சங்க நிா்வாகி சாத்துக்கூடல் சக்திவேல், மாவட்ட மரம் வளா்ப்போா் விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த பரமானந்தம் உள்ளிட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனா்.
