அதிமுக - பாஜக கூட்டணி சரிவைச் சந்திக்குமே தவிர, வளராது: தொல். திருமாவளவன்
சிதம்பரம்: அதிமுக - பாஜக கூட்டணி சரிவைச் சந்திக்குமே தவிர, வளராது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
”அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அயற் பணியிடம் சென்ற ஊழியர்கள் 3 வார காலத்திற்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, அயற் பணியிடங்களுக்குச் சென்ற அனைத்து ஊழியர்களையும் அரசு ஊழியர்களாக பணி நிரந்தரம் செய்யவும் ஓய்வு பெற்றவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓய்வூதியம் உள்ளிட்ட பல பலன்களை வழங்க வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக தமிழக அரசு இதில் தலையிட்டு ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும்.
மதுரை ஆதீனம் சமீபத்திய பேட்டியில் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது எனத் தெரிவித்த தகவல் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அவருக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கியது.
ஆனால், அண்மையிலே காவல்துறை வெளியிட்ட சிசிடிவி காட்சி அடிப்படையில், அதுபோல் எந்தக் கொலை முயற்சியும் நடைபெறவில்லை. இது எதிர்பாராமல் நடைபெற்ற விபத்துதான், அதிலிருந்து ஆதீனம் பாதிப்பின்றி தப்பித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
எனவே, மிக உயர்ந்த பீடத்தில் அமர்ந்துள்ள மடாதிபதி, சமூக பதற்றம் ஏற்படாத வகையில் உணர்வோடு, கருத்தை தெரிவிப்பதற்குக் கடமைப்பட்டவர். சமூக அமைதியை நிலைநாட்டுவதில் அவருக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. ஆனால், தன்னை கொலை செய்ய முஸ்லீம்கள் முயற்சித்தார்கள். அதற்குப் பின்னால் பாகிஸ்தான் சதி உள்ளது என்பது கூறியது மிகப்பெரிய அதிர்ச்சியைத் தருகிறது.
இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்தைப் பரப்புகிற முயற்சியாகவும் இது இருக்கிறது என குற்றம்சாட்டினார் இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்து சமூகத்தினரை, பெரும்பான்மையான சமூகத்தினரை தூண்டும் வகையில் இது அமைந்துள்ளது. இரு சமூகங்களுக்கு இடையே பகைமையைத் தூண்டும் ஒரு குற்றச் செயலாகவே இதை பார்க்க நேர்கிறது.
மடாதிபதிகள், பீடாதிபதிகள், சன்னியாசிகள், துறவிகள் மக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறோம். சமூக நல்லிணக்கம், மத நல்லிணக்கம் மிக மிக இன்றியமையாதது.
தஞ்சாவூர் மாவட்டம் வடகாடு கிராமத்தில் கோயில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் திடீரென ஆதி திராவிடர் பகுதிக்குள்ளே நூற்றுக்கணக்கானோர் நுழைந்து மூர்க்கமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்கள்.
கார், இருசக்கர வாகனங்கள், வீடுகளை தீ வைத்து எரித்துள்ளார்கள். 12 பேர் ரத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் மருத்துவமனை உள்ளே புகுந்து தாக்கியுள்ளார்கள்.
ஆதி திராவிடர்கள் தங்கள் பகுதியில் கட்டியுள்ள அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் அதற்குச் சொந்தமான இடம் ஆகியவற்றில் தங்களுக்கும் உரிமை இருக்கிறது என்று பத்தாண்டுகளுக்கு முன்பே பிரச்னையை எழுப்பினார்கள். அது ஆதி திராவிடர்களுக்கு உரித்தானது என தீர்ப்பு வந்த பிறகும் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முத்துமாரியம்மன் திருக்கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. அந்த தேரோட்டத்தில் பங்கேற்று தேரில் தண்டுபகுதியை தொட்டு தேரோட்டத்தை துவங்கி வைக்கிற பாரம்பரியம் காலம் காலமாக ஆதிதிராவிடர்களுக்கு இருந்து வருகிறது.
அவர்கள் போய் தேரின் வடத்தை தொட்ட பிறகுதான் தேர் அங்கிருந்து புறப்பட்டு வீதிகளுக்கு இழுத்துச் செல்லப்படும். அத்தகைய பாரம்பரியத்தை கடைப்பிடிக்கும் வகையில் ஆதி திராவிட சமூகத்தைச் சார்ந்த சிலர் தேர்வடத்தை தொட்டபோது அங்கே வன்முறையில் ஈடுபட்டுள்ளார்கள். ஆதிதிராவிடரின் குடியிருப்புக்கு உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
இந்தச் சூழலில் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. புலனாய்வு விசாரணை நடைபெறுவதற்கு முன்னதாகவே காவல்துறை ஒரு நிலைப்பாட்டை எடுப்பது புலனாய்வுக்கு எதிரானதாக அமைந்து விடும். எது சரி, எது தவறு, எப்படி ஒரு வன்முறை துவங்கியது, யார் அதிலே வன்முறையை கையில் எடுத்தார்கள், யார் பாதிக்கப்பட்டார்கள்? என்பதையெல்லாம் விசாரணை செய்து அதிலே ஒரு இறுதி முடிவை எடுக்க வேண்டும். அதன் பிறகுதான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அப்படி விசாரணை துவங்குவதற்கு முன்னதாகவே காவல்துறை ஒரு நிலைப்பாட்டை எடுப்பது அந்த விசாரணைக்கு எதிராக அமைந்து விடும். காவல்துறைக்கு கிடைக்கும் தகவல் என்பது ஒரு தரப்புக்கு கூறும் தகவல்தான். அதனை வைத்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வரக் கூடாது. இதுபோன்ற பதற்றமான சூழலில் காவல்துறை ஒரு நிலைப்பாட்டை எடுத்து அறிவிப்பது விசாரணைக்கு எதிராக அமைந்து விடும்.
காவல்துறை சொல்வதே உண்மையாக இருந்தாலும்கூட இது விசாரணைக்கு எதிரான ஒரு நடைமுறை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். காவல்துறை ஒரு தரப்பாக மாறக் கூடாது. அனைவருக்கும் பொதுவான துறை. ஆகவே, ஒரு கருத்தை முன்கூட்டியே உருவாக்குவது அதை தக்க வைக்க முயற்சிப்பது. அந்த அடிப்படையிலேயே விசாரணையை கொண்டு செல்ல வழி வகுத்து விடும்.
எனவே, புதுக்கோட்டை வடகாடு பகுதியில் நடைபெற்றுள்ள இந்த சாதிய வன்முறையில் 12 பேர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய காவல்துறை முயற்சிக்கிறது. இதை கைவிட வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களை, பாதிக்கப்பட்டவர்களாக மட்டும் கையாண்டால்தான் நீதி பெற முடியும். நீதிக்காக காவல்துறை செயல்பட முடியும்.
நீட் தேர்வில் பெண்கள் தாலியை கழற்றி வீசியது அநாகரிகமான நடைமுறையாக இருக்கிறது, காட்டுமிராண்டித்தனமான செயலாக உள்ளது. இது எங்கே வரையறுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. இதுபோல் பரிசோதனை செய்வது சட்டப்பூர்வமானது அல்ல, இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மாநில அரசுக்கும் இதிலே பொறுப்பு இருக்கிறது. தேர்வு எழுதக் கூடியவர்களை அவர்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கும் இருக்கிறது.
அதிமுக - பாஜக கூட்டணி 2001லேயே உருவானது. அப்பொழுதே மக்கள் அதற்கு படிப்பினையைக் கொடுத்துள்ளார்கள். அவர்கள் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ’பாஜகவோடு கூட்டணி வைத்ததால்தான் முடிசூடா மன்னனாக இருந்த நான், எனது தொகுதியிலேயே தோல்வி அடைந்தேன், என்னுடைய படுதோல்விக்குக் காரணம் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததுதான்’ என வெளிப்படையாகத் தெரிவித்தார்.
அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாகி இருப்பதால் ஆட்சியை கைப்பற்றிவிடக் கூடும் என்ற மாயையை உருவாக்க முயற்சிக்கிறார்கள். அதற்கான ஏதுவான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதுதான் கடந்த கால படிப்பினை. மேலும், இந்த கூட்டணி சரிவை சந்திக்கத்தான் வாய்ப்பு இருக்கிறதே தவிர வளர்வதற்கு வாய்ப்பில்லை.
அண்ணாமலை இன்னும் தன்னை தலைவர் என நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் பழைய தலைவர், அவருக்கு பதிலாக நயினார் நாகேந்திரனை நியமித்துவிட்டார்கள்.
நயினார் நாகேந்திரன்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மறுபடியும் அண்ணாமலை தன்னைத் தலைவராக எண்ணிக் கொண்டு பேட்டி கொடுத்து வருகிறார். தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனா? அண்ணாமலையா? என்பதை அவர்களே முடிவு செய்யட்டும்” என்றார்.