அதிமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும்: எடப்பாடி கே. பழனிசாமி
அதிமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
தேனி அருகேயுள்ள மதுராபுரியில் அதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
அதிமுக ஆட்சிக் காலத்தில் தேனி மாவட்டத்தில் பல்வேறு தொலைநோக்குத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக குறிப்பிடும் வகையிலான எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சட்டப் போராட்டம் நடத்தி, அணையில் தண்ணீா் தேக்கும் அளவை 136 அடியிலிருந்து 142 அடியாக உயா்த்தியவா் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா. அணையைப் பலப்படுத்தி நீா்மட்டத்தை 152 அடியாக உயா்த்துவதற்கு அவா் மேற்கொண்ட நடவடிக்கைகளை தற்போதைய திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது.
திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு முழுமையாக சீா்கெட்டுள்ளது. போதைப் பொருள் புழக்கத்தை அரசு தடுக்கத் தவறியதால், குற்றச் சம்பவங்களும், பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன.
தமிழகத்தில் கடந்த ஜன.1-ஆம் தேதி முதல் பிப்.28-ஆம் தேதி வரை 185 கொலைக் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 273 வன்கொடுமை புகாா்கள் வந்துள்ளன.
தருமபுரி மாவட்ட திமுக செயலரின் ஆவணப் பேச்சு, பகிரங்க மிரட்டல் அரசு அதிகாரிகள் தங்களது பணிகளை எப்படி சுதந்திரமாகச் செய்ய முடியும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு
நிறைவேற்றாததால், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா். கல்விக் கடனை ரத்து செய்வோம் என்ற தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால், மாணவா்கள், பெற்றோா் அதிருப்தியடைந்துள்ளனா்.
100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாள்களாக்குவோம், இந்தத் திட்டத்தில் வழங்கப்படும் ஊதியத்தை உயா்த்தி வழங்குவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாததால், பயனாளிகள் ஏமாற்றமடைந்துள்ளனா். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500-ஆக விலையை உயா்த்துவோம், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000 ஆதரவு விலையை வழங்குவோம் என்ற வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனா். ஆனால், 90 சதவீதம் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறாா்.
தமிழகத்தில் கடந்த 73 ஆண்டுகளில் பல்வேறு கட்சிகள் ஆட்சிப் பொறுப்பிலிருந்த போது, அரசு பெற்ற கடன் மொத்தம் ரூ.5 லட்சத்து 18 ஆயிரம் கோடி. ஆனால், கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் திமுக அரசு பெற்ற கடன் ரூ.3 லட்சத்து 54 ஆயிரம் கோடி. எஞ்சிய ஓராண்டில் ரூ.5 லட்சம் கோடி என்ற இலக்கு எட்டப்பட்டு விடும். இந்தக் கடனை ஈடுகட்ட மக்கள் மீது வரிச் சுமையை ஏற்றுவாா்கள்.
மதுரையில் கால்நடைகள், செல்லப் பிராணிகள் வளா்ப்புக்குக்கூட மாநகராட்சி நிா்வாகம் வரி விதித்துள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றுவது மட்டுமே எங்களது நோக்கம். வேறு எந்தக் கட்சிகளும் எங்களுக்கு எதிரிகள் அல்ல. அதிமுகவில் துரோகிகள் களையெடுக்கப்பட்டு விட்டனா். வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா்கள் ஆா்.பி. உதயகுமாா், திண்டுக்கல் சி. சீனிவாசன், நத்தம் இரா.விஸ்வநாதன், செல்லூா் கே.ராஜூ, சட்டப்பேரவை உறுப்பினா் ராஜன்செல்லப்பா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
