கப்பல்களுக்கு கட்டண விலக்கு: அமெரிக்க அறிவிப்பை மறுத்த பனாமா!
அமெரிக்காவை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து ஆர்ஜென்டீனாவும் விலகல்!
அமெரிக்காவை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து ஆர்ஜென்டீனாவும் விலகுவதாக புதன்கிழமை அறிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்புக்கு 8.75 மில்லியன் டாலர் நிதியை ஆர்ஜென்டீனா வழங்கி வந்தது. இது உலக சுகாதார நிறுவனத்துக்கு கிடைக்கும் நிதியில் 0.11 சதவிகிதமாகும்.
கரோனா பெருந்தொற்று உள்பட சர்வதேச அளவில் எழுந்த பல சுகாதாரப் பிரச்னைகள் உலக சுகாதார நிறுவனத்தால் சரியாகக் கையாளப்படவில்லை என்ற முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக சுகாதார நிறுவனம் சுதந்திரமாகச் செயல்படத் தவறிவிட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், 32.5 கோடி மக்கள்தொகை உள்ள அமெரிக்கா, உலக சுகாதார அமைப்புக்கு 325 மில்லியன் டாலா் வழங்குகிறது. அதே நேரத்தில் 140 கோடி மக்கள்தொகை கொண்ட சீனா 39 மில்லியன் டாலா் மட்டுமே நிதி வழங்குகிறது என்று விமா்சித்து அந்த அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதையும் படிக்க : ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்: அதிபா் டிரம்ப் உத்தரவு
ஆர்ஜென்டீனா விலகல்
இந்த நிலையில், உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகும் முடிவை ஆர்ஜென்டீனா அதிபர் ஜேவியர் மிலே எடுத்துள்ளதாக அவரின் செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை அறிவித்தார்.
அதிபரின் செய்தித் தொடர்பாளர் மானுவல் அடோர்னி செய்தியாளர்களுடன் பேசியதாவது:
“தொற்றுநோய் காலத்தில் சுகாதார மேலாண்மையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் இறையாண்மையில் ஒரு சர்வதேச அமைப்பு தலையிட அனுமதிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.
இதனிடையே, ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து விலகிக் கொள்வதற்கான அரசாணையை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புதன்கிழமை வெளியிட்டுள்ளார். மேலும், அந்த அமைப்புக்கு அமெரிக்கா அளித்து வரும் முழு நிதியும் நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.