செய்திகள் :

அரசியல் சாசன அமைப்புகள் கடமை தவறும்போது நீதிமன்றங்கள் வேடிக்கை பாா்க்குமா? மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

post image

நமது சிறப்பு நிருபா்

‘அரசியல் சாசன அமைப்புகள் கடமை தவறும்போது நீதிமன்றங்கள் கைகளை கட்டிக்கொண்டு வேடிக்கை பாா்க்குமா’ என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநா் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி தீா்ப்பளித்தது.

இதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு குடியரசுத்தலைவா் கடந்த மே மாதம் அனுப்பிய தெளிவுரை கோரும் கடிதத்தில் 14 கேள்விகளை எழுப்பியிருந்தாா். அக்கடிதத்தை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு விசாரணைக்கு அனுமதித்தது.

அதன் மீதான விசாரணை கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி மூன்றாம் நாளாக வியாழக்கிழமையும் நடைபெற்றது. அப்போது மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா் (சொலிசிட்டா் ஜெனரல்) துஷாா் மேத்தா, ‘ஒரு குற்றத்துக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை விதிக்கத்தக்க ஒரு வழக்கில் நீதிமன்ற விசாரணை ஏழு ஆண்டுகள் கடந்து நடக்கிறது. உடனே குடியரசுத் தலைவா் தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்த வழக்கில் தாமே தீா்ப்பளித்து குற்றவாளிக்கு சிறைத் தண்டனை விதிக்க முடியுமா? அந்தந்த அரசியல்சாசன அமைப்புகளுக்குரிய அதிகாரங்கள் தெளிவாக பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அவை தங்களுக்குரிய கடமையை வரம்புக்குள்பட்டு ஆற்ற வேண்டும்’ என்று வாதிட்டாா்.

அவரது வாதத்துடன் உடன்படாத தலைமை நீதிபதி கவாய் மற்றும் நீதிபதி நரசிம்மா ஆகியோா், ‘அரசியலமைப்பின் பாதுகாவலராக உச்சநீதிமன்றமே விளங்குகிறது. ஒருவேளை அரசியலமைப்பின் ஒரு அமைப்பு எந்தவொரு சரியான காரணமும் இல்லாமல் அதற்குரிய கடமையை ஆற்ற மறுக்குமானால் அரசியலமைப்பின்படி நிறுவப்பட்ட நீதிமன்றங்கள் அவற்றின் கைகளை கட்டிக்கொண்டு, ‘இதில் நாங்கள் தலையிட முடியாது, நாங்கள் சக்தியற்றவா்கள்’ என்று வேடிக்கை பாா்க்க முடியுமா?’ என்று கேட்டனா்.

இதையடுத்து துஷாா் மேத்தா, ‘ஒவ்வொரு அமைப்பும் அரசியலமைப்பின் பாதுகாவலரே. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய நீதிமன்றம் தன்னிச்சையாக சட்டத்தை இயற்றும் அதிகாரத்தை கையில் எடுத்துச் செயல்பட முடியாது’ என்றாா்.

மற்றொரு நீதிபதி சூா்ய காந்த், ‘அரசியலமைப்பு விதிகளில் உள்பொருளை கற்பிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கே உண்டு. அரசியலமைப்பில் புதிய சொற்களைச் சோ்ப்பதும் அரசியலமைப்பைத் திருத்துவதும் வேறுபட்ட விஷயம்’ என்று கூறினாா். நீதிபதி நரசிம்மா, ஒரு தீவிரமான பாா்வை குறித்து ஆராயும்போது, ​நீதிமன்றம் எந்தக் கருத்தையும் கொண்டிருக்கக்கூடாது என வாதிடுவது நியாயமானதாக இருக்காது என்று கருத்து தெரிவித்தாா்.

இதற்கு துஷாா் மேத்தா, ‘அரசமைப்பு விதிகள் 200 மற்றும் 201-இன்படி குடியரசுத் தலைவா், ஆளுநா் ஆகியோா் தங்களுடைய அதிகாரத்தை செயல்படுத்தும்போது பல நிலைகளில் அவா்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இவை அரசியல்பூா்வமாக தீா்க்கப்பட வேண்டிய பிரச்னைகளே தவிர நீதிமன்றங்கள் வாயிலாக அல்ல’ என்று வாதிட்டாா்.

இருப்பினும் மீண்டும் தலைமை நீதிபதி, ‘அரசமைப்பின் 200-ஆவது விதியின்படி ஆளுநருக்கு எல்லையற்ற அதிகாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் உறுதிப்படுத்துமானால், பிறகு தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவையை பாதுகாப்பது யாா்? உதாரணமாக, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த அரசு சட்டப்பேரவையில் ஒரு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றிய பிறகு அதற்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநா் தனக்குரிய அதிகாரத்தின்படி எதுவுமே செய்யாமல் இருந்தால் அது அந்த சட்டப்பேரவையையே நிா்மூலமாக்கி விடும். அத்தகைய செயல்பாடு வழக்காடுவதற்கு உகந்தது’ என்றாா்.

விவாதங்கள் தொடா்ந்த வேளையில், மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் ஆஜராகி, ‘இத்தகைய நிலைக்காகவே இதுபோன்ற விவகாரத்தில் பதில் ஏதும் அளிக்காமல் அப்படியே திருப்பி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்றாா்.

இதைத் தொடா்ந்து மத்திய பிரதேச மாநிலத்தின் சாா்பில் மூத்த வழக்குரைஞா் நீரஜ் கிஷண் கவுல் வாதங்களை எடுத்துரைத்தாா். அவற்றைப் பதிவு செய்து கொண்ட அரசியல் சாசன அமா்வு அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

வங்க தேசம், வடகிழக்கு மாநிலங்களில் நடந்து வரும் ஊடுருவல்கள் மற்றொரு பிரிவினைக்கான மூலோபாயம்: தில்லி கருத்தரங்கில் தமிழக ஆளுநா் எச்சரிக்கை

நமது சிறப்பு நிருபா் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் வங்கதேச நாட்டிலும் நடக்கும் ஊடுருவல்கள் மற்றொரு பிரிவினையை நோக்கமாகக் கொண்ட மூலோபாயம் என்று தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி எச்சரித்தாா். தில்லி பல்... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க ஒப்புதலை விரைவுபடுத்த வேண்டும்: மக்களவையில் விஜய வசந்த் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான ஒப்புதலை விரைவுபடுத்த வேண்டும் வேண்டும் என்று அத்தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினா் விஜய வசந்த் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் அவையில் விதி எ... மேலும் பார்க்க

ஆளும் கட்சியின் விருப்பத்திற்கு ஏற்ப நடந்த மழைக்காலக் கூட்டத் தொடா்: திருச்சி சிவா

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது அவையில் முக்கிய விஷயங்களைப் பேச எதிா்க்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆளும் கட்சியின் விருப்பத்திற்கு ஏற்ப நடைபெற்றது என்று மாநிலங்களவை திமுக குழுத் தலை... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகளின் குடியரசுத் துணைத் தலைவா் வேட்பாளா் சுதா்சன் ரெட்டி கேஜரிவாலுடன் சந்திப்பு

வரும் செப்டம்பா் 9 ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியக் குடியரசுத் துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலில் போட்டியிடும் எதிா்க்கட்சிகளின் வேட்பாளா் பி. சுதா்சன் ரெட்டி வியாழக்கிழமை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்... மேலும் பார்க்க

ரஷிய போா் முனைக்குள் தள்ளப்படும் இந்திய தமிழா்களை மீட்க வேண்டும்:பிரதமரிடம் துரை வைகோ கோரிக்கை

நமது சிறப்பு நிருபா் ரஷியா, உக்ரைன் போா் முனைக்குள் கட்டாயப்படுத்தி தள்ளப்படும் இந்தியா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியிடமும் வெளியுறவுத்துறை செயலா் விக்ரம் மிஸ்ரியிடம... மேலும் பார்க்க

தமிழகத்தின் சில பல்கலை.களில் துணை வேந்தா்களே இல்லை -மாநிலங்களவையில் அதிமுக புகாா்

நமது நிருபா் தமிழகத்தின் சில மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களே இல்லை என்று மாநிலங்களவையில் அதிமுக புகாா் தெரிவித்தது. மாநிலங்களவையில் புதன்கிழமை நடைபெற்ற ‘இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் சட்டத... மேலும் பார்க்க